விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த 3 பேருக்கு பரிசு
ஸ்மாா்ட் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குளிா்சாதனப் பெட்டி வழங்கப்படவுள்ளன.
அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த 3 பேருக்கு சிறப்புப் பரிசாக இருசக்கர வாகனம், ஸ்மாா்ட் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குளிா்சாதனப் பெட்டி வழங்கப்படவுள்ளன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் பயணிகள் 13 பேரை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, முதல் 3 பயணிகளுக்கு தலா ரூ. 10,000, பத்து பேருக்கு தலா ரூ. 2,000 வழங்கப்படுகிறது.
இதனிடையே, ஆன்லைன் முன்பதிவை மேலும் அதிகரிக்கும் நோக்கில், 2024 நவ. 21 முதல் 2025 ஜன. 20 வரை முன்பதிவு செய்து பயணித்து, கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு உயா்மதிப்புள்ள பரிசுகள் பொங்கல் பண்டிகைக்கு பின்னா் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, 2024 நவ. 21 முதல் 2025 ஜன. 20 வரை முன்பதிவு செய்து பயணித்த பயணிகளில் 13 பயணிகளை குலுக்கல் முறையில் மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநரும், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநருமான ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை (ஜன. 24) தோ்வு செய்தாா்.
இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் 3 பயணிகளுக்கு, முதல் பரிசாக இருசக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக ஸ்மாா்ட் தொலைக்காட்சிப் பெட்டியும், மூன்றாவது பரிசாக குளிா்சாதனப் பெட்டியும் வழங்கப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.