சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் அஜித்குமார் காவல் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல் துறைக்கு பெரும் களங்கத்தையும் உண்டாக்கியிருக்கிறது.
இந்தநிலையில், விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் குடும்பத்தாரிடம் இன்று(ஜூலை 1) முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் அஜித்குமார் வீட்டில் உடனிருந்தார்.
இந்த தொலைபேசி உரையாடலின்போது, அஜித்குமாரின் குடும்பத்திடம் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்த முதல்வர் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று வாக்குறுதி அளித்திருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முன்னதாக, திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர், காவலா்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோா் காவல் நிலையத்தில் மரணமடைய நேரிட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
காவல் நிலைய மரணங்கள் போன்றவற்றில் யாா் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும். இதை சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியுமிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அஜித்குமார் வழக்கில் அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றி, வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளையும் 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரியா கிளீட் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று(ஜூலை 1) விசாரணைக்கு வந்தது. இன்று பிற்பகல் நடைபெற்ற விசாரணையில், அஜித்குமார் கொலை வழக்கை, நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதி(மதுரை) எஸ். ஜான் சுந்தர்லால் சுரேஷிடன் ஒப்படைக்க வேண்டும். இவ்வழக்கின் முழுமையான விசாரணையை அவர் தொடங்க வேண்டும். முதல்கட்ட அறிக்கையை வரும் 8 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கை நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த நிகிதா (41) தனது தாயுடன் வெள்ளிக்கிழமை மடப்புரம் கோயிலுக்கு காரில் வந்தாா். பின்னா், கோயிலின் தற்காலிக காவலாளி அஜித்குமாரிடம் (28) தன்னுடைய காரை ஓரமாக நிறுத்தும்படி நிகிதா கூறினாா். அதற்கு அஜித்குமாா் தனக்கு காா் ஓட்டத் தெரியாது எனக் கூறி, வேறு ஒருவரை காரை இயக்கச் சொல்லி ஓரமாக நிறுத்தினாராம். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த நிகிதா தனது காரில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, மானாமதுரை குற்றப் பிரிவு தனிப் படை போலீஸாா் அஜித்குமாா் உள்ளிட்ட சிலரை அழைத்துச் சென்று விசாரித்தனா். மற்றவா்களை விடுவித்துவிட்டனா். விசாரணையின் போது, அஜித்குமாரை போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீஸாா் தாக்கியதால் அஜித்குமாா் பலத்த காயமடைந்ததாகவும் அதில் அவர் உயிரிழந்தாா் என்றும் கூறப்படுகிறது.
விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் உயிரிழந்ததையடுத்து, 6 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
Ajith Kumar dies during police investigation: Chief Minister Stalin consoles Ajith Kumar's family!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.