என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என பாமக எம்எல்ஏ அருள் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்.
அதேபோல அன்புமணி, ராமதாஸுக்கு ஆதரவாக இருப்பவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள், முதலில் சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி அறிவித்தார். இதனால் அன்புமணிக்கு எதிராக அருள் பேசி வந்ததையடுத்து, பாமக எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி இன்று அறிக்கை வெளியிட்டார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாமக எம்எல்ஏ அருள் இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"நான் ராமதாஸுடன் 35 ஆண்டு காலமாக பயணிக்கிறேன். என்னை பாமகவின் இணை பொதுச்செயலாளராக நியமித்தவர். இதற்கு முன்பு சில பதவிகளை எனக்குக் கொடுத்ததும் அவர்தான்.
இன்றைக்கு நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். அவருக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது. அன்புமணி அதிகாரம் இல்லாதவர். அவர் செயல் தலைவர் மட்டும்தான். என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. என்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது. அதனால், இந்த நீக்கம் செல்லாது. பாமகவின் அடிப்படை உறுப்பினராகவும், பாமகவின் இணை பொதுச் செயலாளராகவும் நான் தொடருவேன். மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை.
நான் பதவிக்கு ஆசைப்பட்டு ராமதாஸை விட்டுவிட்டு, அன்புமணி பக்கம் செல்லவில்லை. ராமதாஸிற்குப் பின் அன்புமணி வேண்டும் என்றுதான் சொல்கிறேன். எந்தக் காலத்திலும் பாமகவில் இருந்து விலக மாட்டேன். வேறு கட்சியிலும் சேரமாட்டேன். ராமதாஸை அன்புமணி நேரில் சந்தித்துப் பேசி ஒன்றுசேர வேண்டும். அப்போதுதான் கட்சி காப்பாற்றப்படும்" என்று கூறியுள்ளார்.
PMK MLA Arul has said that Anbumani does not have the authority to remove me from the party.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.