திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே கடந்த 12ஆம் தேதி வட மாநில இளைஞரால் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படைகள் 30 ஆக அதிகரிக்கப்பட்டு, குற்றவாளி தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து, ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் அதே உடையுடன் நின்றிருந்த நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்திருப்பதாகவும், அவரது புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி அவர்தான் குற்றவாளியா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, சம்பவம் நடந்தபோது, அப்பகுதியிலிருந்த சிசிடிவியில், ஒருவர், பள்ளிச் சிறுமியை கடத்திச் செல்வது பதிவாகியிருந்தது. மேலும் ஒரு சிசிடிவியில் அவரது முகம் தெளிவாகப் பதிவாகியிருந்த நிலையில், அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும், அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவித்து, காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில்தான், குற்றவாளி, ரயிலில் அமர்ந்துகொண்டு செல்லும் ஒரு சிசிடிவி புகைப்படம் அண்மையில் வெளியாகியிருந்தது. அதன் அடிப்படையில், அந்த ரயில் சென்ற பகுதியில் காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்த நிலையில், இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். அவர்களது புகைப்படங்களும் சிறுமியிடம் காண்பிக்கப்பட்டு, அதனை அவர் மறுத்திருந்த நிலையில் தற்போது பிடிபட்டவரை சிறுமி அடையாளம் காட்டினால்தான் உண்மையான குற்றவாளியா என்பது தெரிய வரும் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றவாளியை 30 தனிப்படைகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட காவலர்கள் தேடி வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையிலும், சம்பவம் நடந்தபோது, அங்கிருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் என இதுவரை தனிப்படை போலீசார் 400க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
மேலும், குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவித்த செல்போன் எண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவரிடம் நேற்றுமுன்தினம் விசாரணை நடைபெற்று வந்தநிலையில், அவர் குற்றவாளி இல்லை என்பதை காவல்துறையினர் உறுதி செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.