கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடைபெற்றது.
கோயிலில் சிவாச்சாரியார்கள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பிரசாதத்தை வழங்கினர். முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் வந்த மோடிக்கு ஓதுவார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி கையில் கொண்டுவந்த கங்கை நீரைக் கொண்டு பெருவுடையாரை மோடி வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரா், விநாயகா், முருகன் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று வழிபட்டார்.
சோழர்களின் வரலாற்றை பார்வையிட்ட மோடி
கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய கலாசாரத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயில் மாளிகையில் உள்ள சிலைகள், சிற்ப வேலைபாடுகளை வியந்து பார்த்தார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பெருமைகளைக் கேட்டறிந்தார். சோழர்கள் போர் புரிந்த இடங்கள், அவர்களின் எல்லை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தார்.
சோழர் கால செப்பேடுகள், உலோலாத்தில் வடிக்கப்பட்ட சிலைகள், கற்களில் செதுக்கப்பட்ட சிலைகள் போன்றவற்றை பார்வையிட்டு அவை குறித்து அறிந்துகொண்டார்.
தொடர்ந்து, கோயிலின் முக மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.
சாலைவலம்
திருச்சியில் இருந்து பொன்னேரி பகுதிக்கு மத்திய அரசின் ஹெலிகாப்டரில் மோடி வந்திறங்கினார். அங்கு அவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் பொன்னேரியில் இருந்து புறப்பட்டு, சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8 கி.மீ. தூரத்துக்கு சாலைவலம் மேற்கொண்டார்.
காரின் வெளியே நின்று மக்களை நோக்கி கையசைத்தபடியே சாலைவலம் மேற்கொண்டார். சாலையின் இரு வழிகளிலும் பாஜக, அதிமுக தொண்டர்கள் தங்கள் கட்சிக் கொடியுடன் குவிந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிக்க | கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.