திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 1) சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பிரதமரின் வருகையையொட்டி திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் மற்றும் மலைப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு வருகைப் புரிந்துள்ள பிரதமர் மோடி, புதுச்சேரி பயணத்தை முடித்துக்கொண்டு மதுரைக்குச் சென்றார். அங்கு உள்ள முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
Advertisement
கோயில் சார்பில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முருகனை தரிசனம் செய்த பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. முருகனை வழிபட்ட பிறகு திருப்பரங்குன்றத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டேலா நகருக்குப் புறப்பட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம். ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மதுரையில் பிரதமர் தொடக்கி வைத்த திட்டங்கள்
மரக்காணம்-புதுவை பிரிவு, பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் மறுசீரமைக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, சோழவந்தான் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களை திறந்துவைத்து, சென்னை கடற்கரை-எழும்பூர் 4ஆவது பாதையை அவர் அர்ப்பணித்தார்.