ஜான் பாண்டியன் file photo
தமிழ்நாடு

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை: ஜான் பாண்டியன்!

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்று ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

DIN

சேரன்மகாதேவி: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதில்லை என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர்-தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் இயங்கி வரும் மயோபதி காப்பகத்திற்கு சனிக்கிழமை வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை. அண்மையில் கோவில்பட்டியில் இரட்டைக் கொலை போதையினால் நிகழ்ந்துள்ளது. மது, கஞ்சா போன்ற போதை பொருள்களால் தமிழகத்தில் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது. கஞ்சா போன்ற போதைப் பொருள்களை ஒழிக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இப்போதே கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியாது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சில கட்சிகள் அணி மாறலாம். எந்த அணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெற்றாலும் அக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆகவே, ஆட்சியில் பங்கு கேட்போம்.

இந்த கருத்தைதான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீண்ட காலமாக இந்த கருத்தை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் வலியுறுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 3ஆவது முறையாக ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 2 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்த போதிலும், கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார். இதுபோன்ற நிலை தமிழகத்தில் வரவேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவுவது தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள மனக்கசப்புதான். எல்லா குடும்பத்திலும் தந்தை - மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம்தான். பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

எடப்பாடி தலைமையிலான அதிமுகதான் உண்மையான அதிமுக. ஓ. பன்னீர்செல்வம் தனியாக செயல்பட்டு வருகிறார். அவர் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வருகிறது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஒரு பச்சிளம் குழந்தையை போன்றது. அக்கட்சியை ஒரு அரசியல் கட்சியாகத்தான் பார்க்க முடிகிறது. அவரது அரசியல் நடவடிக்கையை பொறுத்துதான் அவரது செல்வாக்கு தெரியும். தேர்தலில் மக்களை சந்தித்தால் விஜய்யின் பலம் தெரியவரும் என்றார் அவர்.

அப்போது, கட்சியின் திருநெல்வேலி மண்டலத் தலைவர் கண்மணி மாவீரன், தலைமை நிலைய செயலர் சேகர், திருநெல்வேலி மேற்கு மாவட்டத் தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேதமடைந்த குந்தபுரம் நூலகக் கட்டடம்: படிக்க முடியாமல் வாசகா்கள் அவதி

பண்டாரபுரம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் படகுடன் மல்லிப்பட்டினம் திரும்பினா்

பிரதமா் மோடி நாளை கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT