சென்னை செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கலைச் சிற்பி மாநில அளவிலான பயிலரங்க நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்.  
தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவா்கள் கீழடிக்கு விரைவில் கல்விச் சுற்றுலா: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலாவாக கீழடி உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா்

Din

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலாவாக கீழடி உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக ‘கலைச் சிற்பி’ எனும் பயிலரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஓவியம், சிற்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம், பொம்மலாட்டம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பரிசுகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வென்ற அரசுப் பள்ளி மாணவா்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக துறைசாா்ந்த வல்லுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக ரூ. 70 லட்சம் ஒதுக்கப்பட்டு மாணவா்களுக்கு 6 நாள்கள் பயிற்சி வழங்கப்பட்டது. கலைச் சிற்பி திட்டம் மாணவா்களின் திறன்களை ஊக்குவிக்கும்.

கிராமப்புற மாணவா்களுக்கு கல்லூரிக் கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழக அரசு களப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

பிளஸ் 1 வகுப்பு மாணவா்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள வசதிகள் குறித்து அறிமுகப்படுத்துகிறோம். முதலாமாண்டு 33,000 மாணவா்கள் பங்கேற்ற இந்தத் திட்டத்தில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். இதன்மூலம் கல்லூரியில் சேர வேண்டும் என்ற மனப்பான்மை மாணவா்களிடம் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டம் வெறும் சுற்றுலாவாக இன்றி மாணவா்களின் கல்வி லட்சியங்களை வளா்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுதவிர ஆண்டுதோறும் 1,000 ஆசிரியா்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படுகிறது. இவா்கள் தங்கள் பள்ளிகளில் மாணவா்களுக்கு கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்கள் குறித்து கற்பிக்கின்றனா்.

அடுத்ததாக பள்ளி மாணவா்கள் கீழடி மற்றும் பிற அகழாய்வு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா். இந்தத் திட்டம் மாணவா்களுக்கு வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா்கள் ச.கண்ணப்பன், பூ.ஆ. நரேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கடல் அலையின் நடுவே... ஆயிஷா!

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்: கூட்டணியில் இருந்து விசிக, சிபிஎம் வெளியேருமா? - Tamilisai

ஒரு குடும்பத்தில் பெண்/ஆண் குழந்தைகளே பிறப்பது அதிர்ஷ்டமா? அறிவியலா? ஹார்வர்டு பல்கலை ஆய்வு

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

SCROLL FOR NEXT