Edappadi K Palanisamy  ENS
தமிழ்நாடு

'சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால் இன்று நீதி கிடைத்துள்ளது' - பொள்ளாச்சி தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு!

பொள்ளாச்சி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு.

DIN

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீண்டும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் விசாரணை முடிவடைந்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று காலை தீர்ப்பளித்தார்.

அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

குற்றவாளிகளில் ஒருவரான அருளானந்தம், அதிமுகவைச் சேர்ந்தவர் என்ற நிலையில் அதிமுகவும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளது.

அதிமுக தனது எக்ஸ் பக்கத்தில்,

"பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

திமுக-வைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அற்ப புத்தி எங்களுக்கு இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை; வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றினோம்.

பொள்ளாச்சி வழக்கில் சுயவிவரங்கள் வெளியானதாக சொன்ன திமுக, 6 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் சுய விவரங்களை வெளியிட்டது யார் என்று சொல்லுமா? இது பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டும் செயல் இல்லையா? அண்ணா பல்கலை. வழக்கில் யாரைக் காப்பாற்ற எப்ஐஆர் பதிவு செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு?

எப்ஐஆர் அடிப்படையில் யார் அந்த சார்? என்ற நியாயத்தின் கேள்வியைக் கேட்டோம். அந்த கேள்விக்கான விடையைக் கண்டறிய, நீதி கிடைக்க சிபிஐ விசாரணை கோரினோம். ஆனால், அதனை முழு மூச்சாக இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எதிர்த்ததே, ஏன்? யாரைக் காப்பாற்ற துடிக்கிறது திமுக? - கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்றது ஸ்டாலின் மாடல் திமுக அரசு தானே? ஏன் சென்றது?

நீதி கிடைப்பதில் என்ன பயம் இவர்களுக்கு? தெளிவாக சொல்கிறோம்- எங்கள் ஆட்சியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, எங்களால் அமைக்கப்பட்ட சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டு , இன்று கடுமையான தண்டனைகளை அவர்கள் பெற்றிட காரணமாக அமைந்தது அதிமுக அரசு "ஞானசேகரன் திமுக கொத்தடிமை அல்ல- அனுதாபி மட்டுமே" என்று முதல்வர் ஸ்டாலின் போன்று நாங்கள் உருட்டவும் இல்லை; உங்களை போன்று எந்த சாரை காப்பாற்ற முயற்சிக்கவும் இல்லை!

திமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும், இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும்! இது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியும் நிரூபிக்கப்படும்! 2026-ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார் என்ற கேள்விக்க்கான பதிலும், உரிய நீதியும் நிச்சயம் கிடைக்கும்! அன்று திமுக தலைகுனிந்து நிற்கும்! இது உறுதி" என்று பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

SCROLL FOR NEXT