மடுவங்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து தற்கொலை
மடுவங்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
மடுவங்கரை மேம்பாலம் அருகே போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தரமணி தலைமைக் காவலர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் செந்தில், ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை, மடுவங்கரை மேம்பாலத்தில் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் செந்தில், தனது காரை இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில், ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த முருகேசன் (54) மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
மடுவங்கரை மேம்பாலம் அருகே, நேற்று காலை தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, இரு சக்கர வாகனத்தை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு அருகே காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கார் மோதியதில் படுகாயம் அடைந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முருகேசன், கால்களில் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகி, அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மோட்டார் வாகனத்தில் விபத்துகளை ஏற்படுத்திய தரமணி தலைமைக் காவலர் செந்தில் மீது கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் வந்த காரை வாகன ஓட்டிகள் துரத்தி வந்து, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்து மடக்கிப் பிடித்தனர். அப்போதுதான் காரை ஓட்டி வந்தது தரமணி தலைமை காவலரான செந்தில் என்பது தெரிய வந்தது. மேலும் தலைமை காவலர் செந்தில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தலைமைக் காவலரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
மேலும் அவர் மீது மக்கள் அளித்த புகாரினைத் தொடர்ந்து 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், செந்தில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
காவலர் செந்தில் தற்கொலை
நேற்று விபத்து நேரிட்டபோது் கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்கு வந்து அவரைக் கைது செய்தது. மருத்துவப் பரிசோதனையில் அவர் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், காவல்துறையினர் எழுத்துப்பூர்வ உறுதிமொழியுடன் அவரை விடுவித்து, மறுநாள் காலை 11 மணிக்கு முறையான விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
புதன்கிழமை காலை, செந்தில் பணிக்கு வந்தார், பின்னர் விசாரணைக்காக கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றுள்ளார். இருப்பினும் காவல் நிலையத்தை அடைவதற்கு முன்பு, காலை 11 மணியளவில் அவர் தரமணி எம்ஆர்டிஎஸ் நிலையம் அருகே நின்றிருக்கிறார். அங்கு, அவர் தனது இருசக்கர வாகனத்தில் இருந்து எரிபொருள் குழாயை அகற்றி, பெட்ரோலை உறிஞ்சி, தன் மீது ஊற்றி, பொதுமக்கள் முன்னிலையில் தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்த மக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.
பின்னர் செந்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
விபத்து நடந்தபோது, மக்கள் அவரைத் துரத்திச் சென்று பிடிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் செந்தில் மன உளைச்சலுக்கு ஆளானதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].