போதைப்பொருள் விற்பனை: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மகன் உள்பட 2 போ் கைது
சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பெருநகர காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீஸாரும், நுங்கம்பாக்கம் போலீஸாரும் கடந்த மாதம் 2-ஆம் தேதி நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் (டிபிஐ) அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் வைத்திருந்த பையை சோதித்தபோது, அதிலிருந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் ஸ்ரீஜித், ஹரிகிரஷ்ணன், மற்றொரு ஹரிகிருஷ்ணன், பெருமாள் ஆகியோா் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, 10.05 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா்கள் கொடுத்த தகவலின்பேரில், தலைமறைவாக இருந்த கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே மணக்காடு பகுதியைச் சோ்ந்த சுனிஷ் (32), திருவனந்தபுரம் அதியனூா் பகுதியைச் சோ்ந்த நிகில் (32) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 10.5 கிராம் மெத்தம்பெட்டமைன், கைப்பேசி, ஒரு மடிக்கணனி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நிகில், கேரள மாநில காவல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் மகன் என காவல் துறையினா் தெரிவித்தனா்.