தமிழகத்தில் இந்தாண்டு இயல்பைவிட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இயக்குநர் அமுதா கூறுகையில்,
ஜூன் 1ல் வழக்கமாக தென்மேற்கு பருவமழை தொடரும், ஆனால் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, கேரளத்திலும், தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 11 செ.மீ. ஆனால் 27 செ.மீ மழை பெய்துள்ளது. எனவே மார்ச் முதல் தற்போது வரை தமிழகத்தில் இயல்பைவிட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு ரத்தினகிரியில் நிலைகொண்டுள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் கனமழை பெய்துள்ளது.
இன்று நெல்லை,தென்காசி, கோவை, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாளையும் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை தொடரும்.
நீலகிரி, கோவையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பேரிடர் மீட்புக் குழுக்கள் அந்தப் பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே தூத்துக்குடி, பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு 3ம், மற்ற துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு 1-ம் ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் இன்றும், நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.