முதல்வர் மு.க.ஸ்டாலின் X | M.K.Stalin
தமிழ்நாடு

ரிசர்வ் வங்கி மூலம் தாக்குதல் நடத்தும் பாஜக அரசு! முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ள பொதுக்குழுவில் கலந்துகொள்ள திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

DIN

இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்துவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அழைப்புக் கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது, தஞ்சையில் தமிழ்நாடு அரசின் தில்லி பிரதிநிதியாக உள்ள கழக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில், காவிரி  டெல்டா மாவட்டங்களின் அனைத்து விவசாயச் சங்கங்களையும் இணைத்து, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக்கடன் நிபந்தனைகளை உடனே கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகளால் வங்கிகளில் நகைக் கடன் பெறுவதில் மிகப் பெரும் நெருக்கடியை ஏழை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தனியார் கடன் நிறுவனங்களை அவர்கள் நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதிக வட்டி, வட்டிக்கு வட்டி என்ற நிலைக்கு ஏழைகள் ஆளாவதும், அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்த தங்க நகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அடமானம் பெற்று, தங்களை வளர்த்துக் கொள்ளவுமான நிலையை இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள நிலையில், இந்த நிபந்தனைகளைக் கைவிட வேண்டுமெனத் தமிழக முதல்வர் என்ற முறையில் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருக்கிறேன்.

நாட்டு மக்களின் நிலை பற்றிச் சிந்திக்காமல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் நகைக்கடன் நிபந்தனைகள் வரை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மத்திய பாஜக அரசு தாக்குதல் தொடுத்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களை அந்தத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது என அறிவித்திருக்கிறார்.

கல்விக்கான நிதியை மத்திய அரசு தர மறுத்தாலும், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா தந்த இருமொழிக் கொள்கையே இங்கே நிலைத்திருக்கும் என்ற உறுதியுடன் மாநில அரசின் நிதியில் கல்விக்குச் செலவிடுகிறோம். நகைக்கடன் நிபந்தனைகளால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை மக்கள் நாட முடியாத நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு உதவுகிறோம். இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசின் செயல்பாடு. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத உறுதிப்பாடு. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது.

திமுக அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், இரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிர்க்கட்சியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான கடமை என்ன? நம் இலட்சியப் பயணத்தின் இலக்கு எது? என்பதையெல்லாம் உடன்பிறப்புகளாம் உங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு, மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் முதல் தேதியில் கூடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT