சென்னை: நீங்கள்தான் பட்டாளி மக்கள் கட்சி, பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னைத் தலைவராக தேர்வு செய்தீர்கள். பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை என்று தொண்டர்கள் மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் இன்று பாமக மாவட்டச் செயலர்கள் கூட்டம் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் 22 மாவட்டச் செயலர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அன்புமணி, நீங்கள்தான் பட்டாளி மக்கள் கட்சி, பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னைத் தலைவராக தேர்வு செய்தீர்கள். இது, பாமக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர்கள் புதுப்பித்தல் சம்பந்தமான கூட்டம். தொண்டர்கள் இல்லையெனில் பாட்டாளி மக்கள் கட்சி கிடையாது. பொதுக்குழுவில் நீங்கள்தான என்னைத் தலைவராக தேர்வு செய்தீர்கள். நமக்குள் வேற்றுமைகள் இருக்கக் கூடாது என்று நிர்வாகிகளுக்கு அன்புமணி அறிவுறுத்தினார்.
பொறுப்புகள் வரும் போகும், ஆனால் உங்கள் அன்பு, பாசம் என்றுமே போகாது. ராமதாஸின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த நாம் வேகமாகச் செயல்பட வேண்டும். உங்களில் ஒருவராக முதல் தொண்டனாக நான் முதலில் இறங்கி நிற்கிறேன். கட்சியின் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை விரைவில் செய்ய வேண்டும் என்று அன்புமணி பேசியுள்ளார்.
ஏன், எப்போது உண்டானது விரிசல்?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகள்வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன், 2024, டிசம்பர் 28-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற கட்சியின் புத்தாண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அந்த அறிவிப்புக்கு மேடையிலேயே அன்புமணி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் ராமதாஸ்-அன்புமணி இடையே கருத்து மோதல் வெடித்தது.
இதையும் படிக்க.. என்ன, ஜோதா பாய் - அக்பர் திருமணம் பொய்யா? ராஜஸ்தான் ஆளுநர் பரபரப்புப் பேச்சு!
இது விஸ்வரூபம் எடுத்தநிலையில்தான், ராமதாஸ், நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது, அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதே தவறு என்றும் தற்போது செயல் தலைவர் பதவியை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்
இந்த நிலையில்தான், சென்னை சோழிங்கநல்லூரில் இன்று பாமக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தைக் கூட்டி, அன்புமணி ராமதாஸ் பேசி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.