வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறும் நிலையில், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிகாரைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், நாளை மறுநாள் (நவ. 4) முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1. வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருப்பின், முறையான படிவத்தின்படி பட்டியல் திருத்த நடைமுறை வாயிலாக, அதனைச் சரிசெய்து முறையான சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.
2. இந்த நடைமுறை வாயிலாகப் புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும்.
3. புதிய வாக்காளர்களுக்கான அடையாளம் மற்றும் வயது ஆதாரத்திற்கு ஆதார் அட்டையை ஓர் ஆவணமாக ஏற்க வேண்டும்.
4. திருத்தம் செய்து இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் சரிபார்க்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
5. வேட்புமனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்குப் பிறகு புதிய வாக்காளர்களைச் சேர்க்கக் கூடாது.
6. வாக்காளர் திருத்த நடைமுறை முடிவடைந்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் இயந்திரத்தில் வாசிக்கக்கூடிய வடிவில் அப்பட்டியல் வழங்கப்பட வேண்டும்.
7. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையத்தில். எளிதில் தேடும் வசதியுடன் வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நம் மண்ணின், மக்களின் உரிமையைக் காக்க, அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது.
அதே சமயம், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை வெறும் வாக்கு அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தி.மு.க.வின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம்.
அண்டை மாநிலமான கேரள அரசு, சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை, அம்மக்களின் உரிமை மீதான அக்கறையைக் காட்டுகிறது.
ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க. இதுகுறித்துச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? என்று விஜய் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.