வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆரம்ப நிலையிலேயே தோல்வி காண்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய தேர்தல் ஆணையம் சர்வாதிகாரப் போக்குடன், ஏதேச்சதிகாரமாக நடைமுறைக்கு உதவாத, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை இன்று தமிழ்நாட்டில் துவக்கி உள்ளது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று (நவ. 4) காலை 10.00 மணிக்கு வீடு, வீடாக படிவங்களை வழங்க சென்ற போது வீடுகள் பூட்டியுள்ளன. அல்லது உரிய வாக்காளர்கள் வீடுகளில் காணவில்லை.
காரணம் திருப்பூர், வேலூர், கோவை, ஈரோடு, சென்னை அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், திருச்சி, மதுரை போன்ற தொழில் நகரங்களில் காலை 8.00 மணிக்கே தொழிலாளர்களும், தொழில் நடத்துபவர்களும் தங்கள் பணியிடங்களுக்கு செல்வது வழக்கமாகும்.
எனவே, கணக்கெடுப்புக்கான படிவங்களை பெறுவதற்கு உரியவர்கள் இல்லாததால் படிவங்களை வழங்காமல் அலுவலர்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், 2002, 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களில் பெயர் உள்ளவர்கள் பெரும்பாலானோர் புலம் பெயர்ந்து வந்து வாடகை வீடுகளில் குடியிருந்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தற்போது வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்து சென்றுள்ளனர் என்பது களஆய்வில் வெளிப்பட்டு வருகிறது.
மேலும், பல வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் பெயர்கள் மேற்கண்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, 2005 முதல் 2024 வரை பலமுறை சுருக்கம் முறை திருத்தத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தற்பொழுது அவர்களின் பெயர்கள் எந்த வாக்குச்சாவடியின் பட்டியலில் உள்ளன என்று சரி பார்க்க முடியாமல் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திணறுகின்றனர்.
மேலும், 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் முடக்கி விட்டது. இத்தகைய காரணங்களால் சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம் புதிய பட்டியலில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடக்க நிலையிலேயே தோல்வியடையும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை உடனடியாக நிறுத்தி வைத்து, 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, சுருக்கமுறை திருத்தம் செய்து 2026 ஜனவரி முதல் தேதியில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்த்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அன்புமணி பற்றிய உண்மைகளை வெளியே கொண்டு வருவேன்: பாமக எம்எல்ஏ அருள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.