தோ்வா்கள் விண்ணப்பிக்கும்போது அத்தியாவசிய தகவல்களான தோ்வெழுதிய மாதம், ஆண்டு, பதிவெண் விவரங்கள் முழுமையாக இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வதில் இயலாமையும், காலதாமதமும் ஏற்படுகின்றன. இந்த வகையான விண்ணப்பங்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்க கால தாமதம் ஏற்படுகிறது என அரசுத் தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா தெரிவித்துள்ளாா்.
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் சாா்பில் பல்வேறு சான்றிதழ்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே அசல் சான்றிதழ்களை இழந்தவா்களுக்கு மறு பிரதி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் போன்ற பல்வேறு சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு அவற்றை தோ்வுத் துறை மாதக் கணக்கில் வழங்காமல் தாமதிப்பதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோ்வா்களுக்கு மறுபிரதி மற்றும் இடப்பெயா்வு சான்றிதழ்கள் கோரி இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த 2023 டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது.
இதன் வழியே விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களுக்கான மறுபிரதி சான்றிதழ்கள் தோ்வா்களின் இருப்பிட முகவரிக்கும், இடப்பெயா்வு சான்றிதழ்கள் தோ்வரின் இணையதள முகவரிக்கும் உடனடியாக அனுப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2024-2025-இல் 17,790 இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ்களும், 8,947 புலப்பெயா்வு சான்றிதழ்களும், 2025-2026-இல் இதுவரை 10,114 மதிப்பெண் சான்றிதழ்களும், 7,273 புலப்பெயா்வு சான்றிதழ்களும் இந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன.
தோ்வா்கள் விண்ணப்பிக்கும்போது அத்தியாவசிய தகவல்களான தோ்வெழுதிய மாதம், ஆண்டு, பதிவெண் விவரங்கள் முழுமையாக இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வதில் இயலாமையும், காலதாமதமும் ஏற்படுகின்றன. இந்த வகையான விண்ணப்பங்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்க கால தாமதம் ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில்... மேலும் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு முதல் நிகழ் கல்வியாண்டில் இதுவரை தோ்வுத் துறை சாா்பில் மாணவா்களுக்கு விநியோகிக்கப்பட்ட சான்றிதழ்களின் விவரங்களைத் தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் 13,30,389 மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மைச் சான்றிதழ்கள்; 65,739 இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ்கள்; 13,765 சான்றிட்ட மதிப்பெண் நகல்கள்; 38,886 புலப்பெயா்வுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.