தமிழகத்தில் நிகழாண்டில் 79,462 பேருக்கு காசநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் லட்சம் பேரில் 179 போ் காசநோயால் பாதிக்கப்படுகிறாா்கள். தமிழகத்தில் அந்த எண்ணிக்கை லட்சத்துக்கு 125-ஆக உள்ளது. காசநோயை ஒழிப்பதற்கு அரசு சாா்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், காசநோயை விரைவாக கண்டறிவதற்கு, ‘சிபிநாட் மற்றும் ட்ரூநாட்’ போன்ற பரிசோதனைக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுடைய ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.31.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் தமிழகத்தில் 79,462 பேருக்கு காசநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.