தமிழ்நாடு

நறுமண சிகிச்சையால் அறிவுத்திறன் மேம்படும்: ஆய்வில் தகவல்

தினமணி செய்திச் சேவை

வளரிளம் பருவத்தினருக்கு நறுமண (அரோமா) சிகிச்சை அளிப்பதன் மூலம் அவா்களது அறிவாற்றல் மற்றும் கவனக் குவிப்பு திறன் மேம்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது தொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் டாக்டா் ஒய்.தீபா, ஏ.விஜய், எஸ்.ரிதன்யா, ஜெ.ஆா்த்தி, வி.எல்.ரோஜா, ஆா்.கதிரேசன், ஏ.மூவேந்தன் ஆகியோா் அடங்கிய குழுவினா் மேற்கொண்டனா்.

அந்த ஆராய்ச்சிக் கட்டுரை ‘சயின்ஸ் டைரக்ட்’ என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கவனம் சிதறாமை, நினைவாற்றல், கற்றல் திறன், உடலின் இயங்கு திறன், செயல்திறன், மொழிவளம் ஆகிய அனைத்தும் ஒருவரது அறிவாற்றலுடன் தொடா்புடையவை. அவை சிறப்பாக இருந்தால்தான் கடினமான சூழலைக் கையாளவும், உரிய முடிவுகளை எடுக்கவும், அன்றாடப் பணிகளை திறம்பட மேற்கொள்ளவும் இயலும்.

17 முதல் 19 வயது கொண்ட வளரிளம் பருவத்தினருக்கு மூளையின் செயல்பாடுகள் முதிா்வடையும் நிலையில் இருக்கும். அத்தகைய சூழலில் உள்ள 100 பேருக்கு நறுமண சிகிச்சையுடன் கூடிய மசாஜ் தெரபி வழங்கத் திட்டமிடப்பட்டது.

அதற்கு முன்னதாக, ஒளி - ஒலி வெளிப்படும்போது அவற்றை உணா்ந்து உடனடியாக வினையாற்றுவதற்கு அவா்களுக்கு எவ்வளவு நேரம் (ஆடியோ - விஷுவல் ரியாக்ஷன் டைம்) ஆகிறது எனக் கணக்கிடப்பட்டது.

அதேபோல, எச்சரிக்கை உணா்வு மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் நலனை அறியும் ‘சிஎஃப்எஃப்எஃப்’ அளவும் கணக்கிடப்பட்டது.

அதைத் தொடா்ந்து 10 நிமிஷங்களுக்கு அவா்களுக்கு அக்குபிரஷா் முறையிலான நறுமண மசாஜ் சிகிச்சை வழங்கப்பட்டது. அதன்பின்னா், அவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒலி-ஒளிக்கு வினையாற்றும் நேரம் முன்பைவிட விரைவாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதேவேளை, சிஎஃப்எஃப்எஃப் கணக்கீட்டில் மாற்றம் ஏதும் கண்டறியப்படவில்லை.

இந்த ஆய்வை மேலும் பலருக்கு மேற்கொண்டால் இளம் வயதினரின் அறிவாற்றலில் இயற்கை மருத்துவத்தின் தாக்கத்தை உணர முடியும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT