எஸ்ஐஆர் குறித்து தமிழ்நாடே புலம்பிக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரையில், இன்றைக்கு நாம் எங்கு சென்றாலும் எஸ்ஐஆர் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதைப் பேசாமல் இருக்க முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும், “நாங்கள் இந்திய குடிமக்கள்தான்” என்று நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். காரணம், தேர்தல் ஆணையம் அப்படிப்பட்ட ஒரு பெரும் சுமையை நம்மீது சுமத்தியிருக்கிறது. மக்களின் வாக்குரிமையே பறிபோகும் அளவிற்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதை உருவாக்கியவர்கள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒன்றியத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இதை உருவாக்கியிருக்கிறார்கள். எவ்வாறு, விசாரணை அமைப்புகளை வைத்து, பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஆட்சிகளுக்கு இன்னல்களையும் துன்பங்களையும் தந்து கொண்டிருக்கிறார்களோ, அதேபோல் தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தி அப்படி ஒரு சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். வழக்கமாகத் தேர்தலில் கழகத்தை வெற்றிபெற வைக்கும் பொறுப்பைத்தான் உங்களிடத்தில் ஒப்படைப்பதுண்டு. ஆனால் இந்த முறை, மக்களுடைய வாக்குரிமையைப் பெற்றுதரும் பெரும் பொறுப்பையும் கூடுதலாக உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம்.
அதுவும் கொளத்தூர் தொகுதியின் செயல் வீரர்களாக விளங்கிக் கொண்டிருக்கும் உங்களிடம் சொல்லவேண்டிய அவசியமில்லை. என்னைவிட விழிப்பாக இருக்கக்கூடியவர்கள் நீங்கள். வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. நமக்கு அதிக கால அவகாசம் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நவம்பர் 4-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையில் ஒருமாத காலம் நிர்ணயம் செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் எல்லோருடைய கணக்கீட்டுப் படிவமும், அதாவது நாம் வாக்காளராக சேரும் விண்ணப்பப் படிவம் - அதைத்தான் கணக்கீட்டுப் படிவம் என்று சொல்கிறோம். கணக்கீட்டுப் படிவம் என்றாலும் சில பேருக்குப் புரியாது. நாம் வாக்காளராக சேருவதற்கு ஒரு படிவம் கொடுக்கிறார்கள்.
இன்றைக்கு தேதி 14. பத்து நாட்கள் முடிவடைந்துவிட்டன. மீதி இருப்பது எத்தனை நாட்கள் என்று உங்களுக்குத் தெரியும். அந்த விண்ணப்பதை நாம் வாங்கிப் பார்க்கும் போது, நமக்குப் பெரிய குழப்பம் வருகிறது. தலை சுற்றுகிறது. தமிழ்நாடு அதுகுறித்து புலம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், இங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. அதை ஆதரித்து உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் வெட்கக் கேடு நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மக்களைச் சந்திக்க அவர்களுக்குத் தெம்பு இல்லை. அதனால்தான் இந்தக் குறுக்கு வழியை அவர்கள் நாடியிருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட நிலையில் உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, தொகுதி முழுவதும் ஒரு பூத் விடாமல் சுற்றிச் சுழல வேண்டும்.
அந்தக் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப நாமெல்லாம் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நியமித்திருக்கும் BLO-க்கும் - மக்களுக்கும் இடையே நம்முடைய BLA2-தான் துணை நிற்க வேண்டும். உதவிசெய்ய வேண்டும். ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதைப் பூர்த்தி செய்ய அனைத்து வகையிலும் நீங்கள் துணைநிற்க வேண்டும் என்று உங்களையெல்லாம் இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.