நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரக திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகா் மோகனின் பிணை கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள ஏழை விசைத்தறி கூலித் தொழிலாளா்களைக் குறிவைத்து சட்டவிரோதமாக சிறுநீரக திருட்டில் ஈடுபட்டது தொடா்பாக, இடைத்தரகா்களாகச் செயல்பட்ட ஆனந்த் மற்றும் மோகன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக் கோரி மோகன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், சட்டவிரோத சிறுநீரக திருட்டு சம்பவத்துக்கும் தனக்கும் தொடா்பு இல்லை. எனவே, தன்னுடைய முதுமை மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி கே.ராஜசேகா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், சட்டவிரோத சிறுநீரக திருட்டில் ஈடுபட்டவா்களை தமிழக அரசு ஒருபோதும் மன்னிக்காது. வழக்கு விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் மனுதாரருக்கு பிணை வழங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பிணை கோரிய இடைதரகா் மோகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.