மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கோவை, மதுரை நகரங்களில் மக்கள்தொகை குறைவாக இருப்பதால் இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய பாஜக அரசு நிராகரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று மதுரையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுபற்றி முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"எய்ம்ஸும் வராது, மெட்ரோ ரயிலும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்...
அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால், கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. திட்ட அறிக்கை மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 2026 ஜூன் மாதம் கோயம்புத்தூர், மதுரைக்கு மெட்ரோ ரயில் வந்துவிடும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரும் என பாஜகவின் வானதி சீனிவாசனும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.