சென்னை: தமிழ்நாடு அண்மைக் காலமாக சந்தித்திராத அளவுக்கு நாம் கடந்துகொண்டிருக்கும் நவம்பர் மாதம் மிக மோசமான மாதமாக இருக்கப் போகிறது என்றும், அதில் சந்தேகமேயில்லை எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவு ஒன்றை வெளியிடடுள்ளார்.
அதில், தமிழ்நாட்டின் நவம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 181.7 மி.மீ. ஆகும். ஆனால் இதுவரை 50 மி.மீ. மழைதான் பதிவாகியிருப்பதாக அவர் கவலை தெரிவித்திருக்கிறார்.
அதாவது, இதுவரை நவம்பர் மாதத்தில் பெய்திருக்கும் மழை அளவுகளின் தரவுகளின்படி பார்த்தால், நவம்பர் மாதத்தில் நல்ல மழை பெய்யும்போதெல்லாம், ஒட்டுமொத்த வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போவதில்லை. உதாரணமாக, 2021 ஒரு வரலாற்று நவம்பர் மாதமாகும், ஒரு மாதத்தில் 400 மி.மீ. மழைப்பொழிவு கூட இருந்துள்ளது.
அதுபோல, நவம்பர் மாதத்தில் மழை இல்லை என்றால், வடகிழக்குப் பருவமழை எப்போதும் இயல்பை விடவும் குறைவாகவே பதிவாகியிருக்கும். டிசம்பரில் இந்த நிலை பெரிய அளவில் மாறிவிடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் நவம்பரில் பதிவான மழை அளவு
2018 - 159.1 மி.மீ.
2019 - 125.8 மி.மீ.
2020 - 203.3 மி.மீ.
2021 - 425.3 மி.மீ.
2022 - 178.5 மி.மீ.
2023 - 233 மி.மீ.
2024 - 140.2 மி.மீ.
2025 - 50.9 மி.மீ. (20.11.2025 வரை)
இதனைப் பார்த்தால், கடந்த காலங்களில் இல்லாத வகையில், ஒரு மோசமான நவம்பர் மாதத்தை தமிழகம் சந்திக்கப் போகிறது என்றும் அதில் சந்தேகமேயில்லை என்றும் அவர் பதவிட்டுள்ளார்.
நவம்பர் மாத இறுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருந்தாலும், அது சென்னைக்கு மழையை தருமா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. தமிழகத்தில் மிக கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.