சுய உதவிக்குழு எந்த கோரிக்கை வைத்தாலும் முதல்வர் உடனடியாக அதை ஏற்றுக்கொள்கிறார் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
மதுரை தமுக்கம் திடலில் 12 நாள்கள் நடைபெறும் மதி கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் 500 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் மதி கண்காட்சி (சரஸ் மேளா) நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு மதுரை மாவட்டத்தில் மதுரை தமுக்கம் திடலில் 22.11.2025 முதல் 03.12.2025 வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பொருட்கள், தஞ்சாவூர் பொம்மைகள், இராமநாதபுரம் மாவட்ட கடலோர பொருட்கள் போன்றவை இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவு திருவிழாவில் திண்டுக்கல் பிரியாணி, கோயம்புத்தூர் வெள்ளை மட்டன் பிரியாணி, ஜிகர்தண்டா போன்ற உணவுப்பொருட்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் நேரடியாக தயாரிக்கப்பட்டு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் "மதுரை என்றாலே கிராமிய வாசனை நிறைந்த மண், பாசம் ககுறையாத மண். "All India Tour" போக வேண்டும் என்று நினைப்பவர்கள் மதுரையில் நடைபெறும் மதி கண்காட்சிக்கு வாருங்கள். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற மதி கண்காட்சியில் வருவாய் 1 கோடியே 50 லட்சத்தைத் தாண்டியது.
இந்த ஆண்டு அதை விட தாண்டும் என்று நினைக்கிறேன். மகளிரின் பொருளாதாரம் மேம்பட வேண்டும், சுதந்திரமாக செயல்பட வேண்டும் என முதல்வர் மகளிருக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
சுய உதவிக்குழு எந்த கோரிக்கை வைத்தாலும் முதல்வர் உடனடியாக அதை ஏற்றுக்கொள்கிறார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வருவாய் ஆண்டுக்கு 10 கோடி ரூபாயை எட்டவில்லை, தமிழ்நாடு முதல்வர் எடுத்த நடவடிக்கையால் கடந்த ஒரு ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வருவாய் 620 கோடி ரூபாய் எட்டியுள்ளது" எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.