இலவசங்களே அனைத்து விலை உயர்வுக்கும் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சிமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருநெல்வேலியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடு முழுவதும் மேய்ச்சல் நிலப் பிரச்னைகள் உள்ளன. மேய்ச்சல் நிலங்களை அரசு பாதுகாப்பதில்லை. மாநிலத்தில் பால்வளத் துறை இருக்கிறது. ஆனால், பால் ஆந்திரம் உள்ளிட்ட வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதியாகிறது.
போதைப் பொருட்கள் காவல் துறைக்குத் தெரியாமல் உள்ளே வருகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு காய்ச்சிச் சாராயத்தை விற்றால் நல்ல சாராயம். நீங்களோ நாங்களோ விற்றால் அது கள்ளச்சாராயம். கள்ளக்குறிச்சி, மரக்காணம் கள்ளச்சாராயச் சாவுகளுக்குப் பிறகு, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழித்திருக்க வேண்டுமே?.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு ரூ.10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கி, அதை நியாயப்படுத்த இந்த அரசு முயற்சிக்கிறது. இந்தியாவிலேயே அதிகக் கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. 10 லட்சம் கோடி. இலவசங்களுக்கான பணத்தை மக்களிடம் இருந்து எடுத்து மக்களுக்கே கொடுக்கிறார்கள். இலவசங்களே அனைத்து விலை உயர்வுக்கும் காரணம்.
மின் கட்டண உயர்வு என அனைத்து உயர்வுக்கும் இலவசங்களே காரணம். இந்த முறை பொங்கல் பரிசு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை தமிழக அரசு கொடுக்கும். பிகார் தேர்தல் வெற்றிக்குக் காரணம் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்தது தான். எனக்கு நீங்கள் ஓட்டுப் போட்டால் அனைத்துப் பிரசனைகளையும் சரி செய்வேன்.
ஒரு லிட்டர் தாமிரபரணித் தண்ணீரை ஒரு பைசாவிற்குத் தனியார் நிறுவனங்களுக்கு இந்த அரசு விற்கிறது. இது மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. காமராஜர் காலத்தில் அரசுத் துறை அதிகாரிகள் இப்படித் தவறு செய்துவிட்டுப் பதவியில் இருக்க முடியுமா?.
ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன். தீமைக்கு மாற்று ஒரு தீமை அல்ல. தி.மு.க. தோல்வி பெற வேண்டும், அதற்காக அ.தி.மு.க. வரவேண்டும் என நாங்கள் கூறவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கொடியில் இருக்கும் அண்ணா படம் தான் மாற்றமே தவிர, கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.