ஆசிரியர்களை திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் கைவிடாது என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து, 2011-ஆம் ஆண்டிற்கு முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வினை போக்கும் வகையில் நேற்று தனது தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அக்கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளை முதல்வரிடம் தெரிவித்து எடுக்கவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை பெற்றார்.
அப்போது முதல்வர், ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என்றும் உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் உடனிருந்தார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களும் பணியில் தொடரவும், பதவி உயா்வு பெறவும் டெட் தோ்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி வரும் அகில இந்திய ஆசிரியா் கூட்டணியினா், டெட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதமா் அலுவலகத்திற்கு தபால் மூலம் மனு அனுப்பி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.