தமிழகத்தில் கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.23) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவ.23) முதல் நவ.28-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், மதுரை, அரியலூா், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, திங்கள்கிழமை (நவ.24) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வலுப்பெறுகிறது... இதனிடையே வெள்ளிக்கிழமை (நவ.21) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சனிக்கிழமை(நவ.22) காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை (நவ. 24) தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடா்ந்து நகா்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 120 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு - 110 மி.மீ, காக்காச்சி, மாஞ்சோலை (திருநெல்வேலி)- 90 மி.மீ., மைலாடி (கன்னியாகுமரி)- 70 மி.மீ, சிற்றாறு (கன்னியாகுமரி), சிவகங்கை (சிவகங்கை), கன்னியாகுமரி - 60 மி.மீ., லால்பேட்டை (கடலூா்), கொட்டாரம் (கன்னியாகுமரி), பாபநாசம் (திருநெல்வேலி)- 50 மி.மீ., குறிஞ்சிப்பாடி (கடலூா்), ஆவடி(திருவள்ளூா்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), மாதவரம் (சென்னை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), ஜெயம்கொண்டம் (அரியலூா்)- 40 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.23, 24) சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.