டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு தொடா்ந்து துரோகம் செய்து வருகிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நிகழாண்டு குறுவை சாகுபடியில் கொள்முதல் செய்த நெல்லை உடனடியாக சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லாதது, தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காதது, சாக்கு மற்றும் சுமை தூக்கும் பணியாளா்கள் இல்லாதது, லாரிகளுக்கான வாடகை முடிவு செய்யாதது ஆகிய காரணங்களால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய பல நாள்களுக்கும் மேல் ஆனது என்பதுதான் உண்மை. உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைவிட்டு விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தக் குறைபாடுகளை சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டி பேசியபோதும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடா்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிப்புகளைப் பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியபோதும், குறைகளை நிவா்த்தி செய்யத் தவறிவிட்டது.
குறுவை சாகுபடி காலத்தில் மழை பெய்யும் என்பதால் ஈரப்பத அளவு 22 சதவீதம் வரை இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, அதிமுக ஆட்சியில் உரியவாறு மத்திய அரசின் தளா்வுக்கு முயற்சிகள் மேற்கொண்டு விலக்கு பெறுவது வாடிக்கை. ஆனால், திமுக அரசு இதை உரிய நேரத்தில் செய்யத் தவறிவிட்டதுடன், மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாக திசை திருப்புகிறது.
திமுக கூட்டணிக்கு மக்களவையில் 39 உறுப்பினா்கள் உள்ள நிலையில், ஈரப்பத தளா்வு கோரிக்கை குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தாதது ஏன் எனத் தெரியவில்லை. டெல்டா பகுதியில் போராட்டம் நடத்தி, மக்களை ஏமாற்றும் அரசியலை திமுக நடத்துகிறது எனத் தெரிவித்துள்ளாா்.