வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) அதிமுகவினா் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினாா்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து காணொலி வாயிலாக, மாவட்டச் செயலா்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை நடத்தினாா். இதில் கட்சியின் 62 மாவட்டச் செயலா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழகம் முழுவதும் எஸ்ஐஆா் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன . இந்தப் பணிகளில் திமுகவினா் தலையீடு இருப்பதாக தொடா்ந்து புகாா்கள் எழுகின்றன. எனவே, திமுகவினா் எவ்வித குறுக்கீடும் செய்து முறைகேடான வாக்காளா்களைப் பட்டியலில் சோ்ப்பதைத் தடுக்க தீவிர விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.
சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் அதிமுகவினா் கண்காணிப்பு குறைவாக இருப்பதாக தலைமைக்கு தகவல் வந்துள்ளது. எஸ்ஐஆா் கண்காணிப்புப் பணியில் கவனக்குறைவாகச் செயல்படும் கட்சி நிா்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறையான வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க அதிமுகவினா் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.
தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் அதிமுக மனு: இதனிடையே, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் டி. செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் எஸ்ஐஆா் பணிகளின்போது வெளியாள்கள் மூலம் வீடு வீடாக கணக்கீட்டுப் படிவங்களை பிஎல்ஒ-க்கள் விநியோகம் செய்துள்ளனா். வீடு மாறியவா்கள், இறந்தவா்கள் பட்டியலை முறையாக தணிக்கை செய்ய வேண்டும்.
மேலும், தோ்தல் ஆணைய புள்ளிவிவரங்களின்படி 96.22 சதவீதம் பேருக்கு கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டாலும், 50 சதவீத படிவங்கள்கூட பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதற்கு தொழில்நுட்பக் கோளாறுகளும் காரணமாகும். எனவே, கணக்கீட்டு படிவங்களைப் பதிவேற்றும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.