கரூருக்கு வந்த உண்மை கண்டறியும் பாஜக குழுவினர், கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்? என கரூர் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் விஜய்யைப் பார்க்க மக்கள் கூடியபோது நேரிட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக பலியாகினர்.
41 பேர் பலியான இந்தச் சம்பவத்தில் ஆளும் திமுகவினர் மின்சாரத்தைத் துண்டித்து கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதாக தவெகவினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இந்த விவகாரம் குறித்து விடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “உண்மைக் கண்டறியும் குழு மணிப்பூருக்குச் சென்றிருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும். கும்பமேளாவில் நேரிட்ட நெரிசல் பலியை விசாரிக்க சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அதேபோன்று குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உண்மையைக் கண்டறிய சென்றிந்தால் ஏற்புடையதாக இந்திருக்கும்.
எங்கெல்லாம் சென்று உண்மையைக் கண்டறிய செல்லாமல் கரூருக்கு மட்டும் வந்தது ஏன்? உள்ளபடியே விசாரணை ஆணையத்தின் அறிக்கையின்படி செயல்படுவோம்.
அதேபோல, இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், அவர்களை அழைத்து விசாரிக்கவும் உண்மைக் கண்டறியும் குழுவிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மைக் கண்டறியும் குழுவிடம் ஒரு பெரியவர் பேசும்போது, மாவட்ட நிர்வாகம் மீது தவறா? என மொழிபெயர்த்தவர் (தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைக் குறிப்பிடாமல் குறிப்பிட்டு) மாவட்ட நிர்வாகம் மீது தவறான தகவலை திணிக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்தப் பெரியவர் நிகழ்ச்சியை ஏற்பாடு கட்சியின் மீதுதான் தவறு என சரியாகச் சொன்னார்.
உண்மைக் கண்டறியும் குழு என்ன தகவல்களை வேண்டுமானாலும் விசாரித்துக் கொண்டு, விசாரணை ஆணையத்தின் முன்பு சமர்ப்பிக்கட்டும். கருத்து யார் வேண்டுமானாலும் கொடுக்கட்டும்.
அனைவரின் கருத்தையும் வரவேற்போம். அது சரியா? தவறா? என்பதை விசாரணை ஆணையம் முடிவெடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.