தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்லில், தவெக தலைவர் விஜய், செப். 27-ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ”தான் எந்த குற்றமும் செய்யவில்லை, அரசியல் காரணங்களுக்காக வழக்கில் தன்னை சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கில், ”காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன். எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி என். செந்தில்குமார் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சந்தோஷ், அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்வதாக கூறி மனுதாரர் அனுமதி பெற்றார். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் ரூ. 5 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இது தவிர பொது சொத்துக்கள் சேதப்படுத்தியதாக மேலும் எட்டு வழக்குகள் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ளதாக கூறி, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்தார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ. முருகவேல் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்? கட்சியினரைக் கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? என சரமாரியாக கேள்வி எழுப்பி, முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.