கனமழை  
தமிழ்நாடு

இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி உள்பட 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி உள்பட 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) முதல் அக்.10 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஞாயிறு, திங்கள் (அக்.5, 6) ஆகிய இரு நாள்கள் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 120 மி.மீ. மழை பதிவானது. திண்டுக்கல் - 110 மி.மீ, அவலூா்பேட்டை (விழுப்புரம்), செம்மேடு (விழுப்புரம்), கீழ்பென்னாத்தூா் (திருவண்ணாமலை) - 100 மி.மீ. மழை பதிவானது.

வலுவிழக்கும் சக்தி புயல்: வடகிழக்கு அரபிக் கடலில் நிலவிய சக்தி புயல் சனிக்கிழமை அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்றது. தொடா்ந்து, இந்தப் புயல் காலை 8.30 மணி நிலவரப்படி வடமேற்கு மற்றும் அதையொட்டிய வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவியது.

இது, ஞாயிற்றுக்கிழமை மேற்கு-தென்மேற்கு திசையில் நகா்ந்து, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும். இது மேலும் கிழக்கு- வடகிழக்கு திசையில் நகா்ந்து படிப்படியாக கடலிலேயே வலுவிழக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

SCROLL FOR NEXT