இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த மேலுமொரு சர்வதேச சிம் பாக்ஸ் வலையமைப்பை தமிழ்நாடு மாநில இணையவழி குற்றப்பிரிவு முறியடித்துள்ளது.
சிம் பாக்ஸ் (SIM box) என்பது பல சிம் கார்டுகளைக் கொண்ட ஒரு தொலைத்தொடர்பு சாதனம்.
தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் நடந்த சைபர் குற்றங்களுடன் தற்போது கண்டறியப்பட்டுள்ள சிம் பாக்ஸ்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த செப்டம்பரில் உளவுத்தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, சென்னையில் 14 அதிக திறன் கொண்ட சிம் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், முக்கிய குற்றவாளி, தில்லியில் 8 சிம் பாக்ஸ்களை ஒப்படைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதேகும்பல் தில்லி, மும்பை மற்றும் பிகார் வரை பரவி, வந்தது தெரியவந்தது. இந்த தொடர்புகளைத் தொடர்ந்து விசாரிக்க, தமிழ்நாடு மாநில இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் சந்தீப் மிட்டல் வழிக்காட்டுதலின்படி, மாநில சைபர் குற்ற விசாரணை மைய காவல் கண்காணிப்பாளர் ஐ. ஷஹனாஸ் மேலாண்மையில், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான பல சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தில்லி, பிகார் மற்றும் மகாராஷ்டிரத்தில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனைகளில், தில்லியில் உள்ள நரேலாவில் 2 இடங்களிலும் நிலோதி என்ற இடத்திலும் சிம் பாக்ஸ்கள் கண்டறியப்பட்டன. இத்துடன், நிலோதி பகுதியைச் சேர்ந்த தாரிக் அலாம் அவரது கூட்டாளிகள் லோகேஷ் குமார் மற்றும் அசோக் குமார் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இச்சோதனையில், நரேலாவில் இருந்து 16 சிம் பாக்ஸ்கள் மற்றும் நிலோதியில் இருந்து 8 சிம் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொழில் நுட்ப பகுப்பாய்வில், இந்த சிம் பாக்ஸ்கள் சர்வதேச இணையவழி மோசடி கும்பலால் நடத்தப்பட்ட 'டிஜிட்டல் கைது' மோசடியில் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
சைபர் குற்றத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கையில், தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு கடந்த இரண்டு மாதங்களில் சர்வதேச இணையவழி குற்ற வலையமைப்புக்குச் சொந்தமான 44 சிம் பாக்ஸ்களை இதுவரை கைப்பற்றியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் நடந்த சைபர் குற்றங்களுடன் இந்த சிம் பாக்ஸ்களுக்கு உள்ள தொடர்புகளை கண்டறிய, தற்போது ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிக்க | 3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.