தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் | முதல்வர் மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

'இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீதான மீதான தாக்குதல் முயற்சி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீதான தாக்குதல் முயற்சி கடும் கண்டனத்திற்குரியது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணையின்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் தனது செருப்பை வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை நீதிமன்ற காவலர்கள் வெளியேற்றியதும், 'இந்த சம்பவம் என்னை எதுவும் பாதிக்காது' என்று கூறி வழக்கு விசாரணையைத் தொடர்ந்துள்ளார் நீதிபதி பி.ஆர். கவாய்.

இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீதான வெட்கக்கேடான தாக்குதல் நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும். இது கடுமையான கண்டனத்திற்குரியது.

தலைமை நீதிபதி கருணை, அமைதி, பெருந்தன்மையுடன் இதற்கு பதிலளித்த விதம் நீதித்துறையின் வலிமையைக் காட்டுகிறது. ஆனால், இந்த சம்பவத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

நீதிபதியைத் தாக்க முயன்றவர், தனது செயலுக்கான காரணத்தை வெளிப்படுத்தியிருப்பது நமது சமூகத்தில் அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகள் மீது மரியாதை ஏற்படுத்தும் கலாசாரத்தை வளர்க்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் வழக்கம்போல விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது, 'கடவுள் விஷ்ணுவின் சிலை ஒன்றின் தலை, சமூக விரோதக் கும்பலால் உடைக்கப்பட்டிருக்கிறது. அதனை சரி செய்யுமாறு உத்தரவிட வேண்டும்' என நீதிமன்ற அறையில் வழக்குரைஞர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதனைக் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், 'இதற்கெல்லாம் எப்படி உத்தரவிட முடியும்? நீங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்' என்பது போன்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

நீதிபதியின் கருத்தைக் கேட்ட வழக்குரைஞர், 'சநாதனத்துக்கு இழுக்கு ஏற்படுமாயின், அதனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்' என்று கூச்சலிட்டபடி, காலில் இருந்து காலணியைக் கழற்றியிருக்கிறார். அதனை அவர் வீசுவதற்கு முற்படுவதற்கு முன்பே, நீதிமன்றக் காவலர்கள், அவரைத் தடுத்து அவரிடமிருந்து காலணியைப் பறித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற விசாரணை அறையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பவத்தில் ஈடுபட முயன்ற வழக்குரைஞரை, நீதிமன்ற பாதுகாவலர்கள் நீதிமன்றத்துக்கு வெளியே அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர் பற்றிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பவத்துக்குப் பிறகு வழக்கம் போல தலைமை நீதிபதி தனது பணியை தொடர்ந்தார். இதனால், எந்த வழக்கும் விசாரணையும் பாதிக்கப்படவில்லை.

Chief Minister M.K. Stalin condemned on attempted attack on Chief Justice B.R. Gavai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற வழக்குரைஞர் இடைநீக்கம்!

மே.வங்கத்தில் மழை பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற பாஜக எம்பி, எம்எல்ஏ மீது தாக்குதல்!

தஸ்மின் பிரிட்ஸ் சதம் விளாசல்; நியூசி.யை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!

கனவே... தர்ஷனா பனிக்!

அலையே... ஆஷு ரெட்டி!

SCROLL FOR NEXT