'மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக வந்திருக்கிறேன்' - கரூரில் கமல்ஹாசன் ஆய்வு!
கரூர் நெரிசல் பலி சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு..
கரூா் சம்பவம் குறித்து குறைகள் கூறுவதற்கோ அல்லது நிறைகள் கூறுவதற்கோ இது நேரமல்ல என்றாா் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம்தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் நிகழந்த இடத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்குச் சென்று அவா்களுடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
இதனிடையே கரூருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன், கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"சம்பவம் தொடா்பாக நீதிமன்றத்தில் விசாரணையில் நடந்துகொண்டிருக்கிறது. இதைப்பற்றி அதிகம் பேச கூடாது. ஏற்கெனவே நிறைய பேசிவிட்டார்கள். நாங்கள் இந்த மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும் ஆறுதல் சொல்வதற்கும் வந்திருக்கிறோம்.
இந்த மக்கள் நிறைய கஷ்டப்பட்டுவிட்டார்கள். அவர்களை விட்டுவிடுங்கள். இது யாரையும் பாராட்ட வேண்டிய நேரமில்லை. ஆனால் அந்த பாலம் இருக்கும் பகுதியில் அனுமதி கொடுக்காதது சரியானதுதான். இல்லையெனில் இதைவிட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்.
இப்போது குறைகள் கூறுவதற்கோ, நிறைகள் கூறுவதற்கோ இது நேரமல்ல. இனி, இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர், ஒரு பண்புள்ள அரசியல்வாதி எப்படி செயல்பட வேண்டுமோ ஒரு தலைமை எப்படி செயல்பட வேண்டுமோ அதைக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு நன்றி.
கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய விடியோக்கள் வருகின்றன. எது உண்மை என ஆராய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை தனது கடமையைச் செய்திருக்கிறார்கள். அவர்களை குறை சொல்ல வேண்டாம்.
இச்சம்பவம் தொடா்பாக உண்மையை கண்டுபிடிக்கக் கூடிய நிா்பந்தத்தில் நீதிமன்றமும், காவல்துறையும் இருக்கிறது என்றாா் அவா்.
மேலும், விஜய்க்கான அறிவுரையை நீதிமன்றம் சொல்லும்" என்றார்.
Makkal Needhi Maiam Party leader Kamal Haasan reviews the Karur stampede death incident.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!