வேலூர்: தவெக தலைவரும் நடிகருமான விஜய்க்கு தன்நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியில் வர பயந்துகொண்டிருக்கிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தமிழக - ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ள மோர்தனா அணை 11.5 மீட்டர் உயரம் 263 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையாகும். மேலும் மாவட்டத்தில் மிகப்பெரிய அணையாகும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோர்தானா அணை முழுவதுமாக நிரம்பி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தற்போது மோர்தானா அணையில் இருந்து 460 கன அடி தண்ணீர் தற்போது வெளியேறி வருகிறது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோர்தானா அணைப்பகுதி சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதால் அந்த பகுதியில் கூடுதலான போக்குவரத்து வசதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மோர்தானா பகுதியில் குற்றச்சாட்டுகளை தடுக்க காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் தவெக தலைவர் விஜய் காணொலி மூலம் பேசி வருவதாக கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, குற்றம் புரியவிலை என்றால் தைரியமாக அவருடைய தொண்டர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் சொல்லி இருக்க முடியும்.
தன்நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியில் வர பயம். எனவேதான் விஜய் நேரடியாக சென்று பார்க்க முடியாமல் காணொலி மூலம் பேசி வருகிறார்.
கச்சத்தீவு தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள கருத்திற்கு பதில் அளித்து பேசிய துரைமுருகன், அவருக்கு ஒன்றும் தெரியாது, யாரோ எழுதிக் கொடுத்து இவர் பேசி வருகிறார் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.