முகப்பு
தமிழ்நாடு

தனிக்கட்சி தொடங்க முடியுமா? அரசியல் தலைவர்களுக்கு விஜய் பகிரங்க சவால்!

உங்களால் ஒரு தனிக்கட்சி தொடங்க முடியுமா? என அரசியல்கட்சித் தலைவர்களுக்கு விஜய் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:20 AM
தவெக தலைவர் விஜய் - DPS
பகிர்:

சேலம்: அரசியலில் எனக்கு அனுபவம் இல்லை என்று சொல்பவர்கள், ஒரு தனிக் கட்சி தொடங்க முடியுமா? என்று தவெக தலைவர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று தொடங்கியது. கூட்டத்தில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பேசியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் பேசத் தொடங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், எந்த ஒரு கட்சியையும் அழிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. எங்களது எதிரி யார் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு, அவர்களை அழித்துவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

Advertisement

அவர்களுக்கு ஒரு கேள்வி, என்னைப் பற்றி ஒரே விஷயத்தைச் சொல்லி புலம்புபவர்கள் என்ன சொல்கிறார்கள். எனக்கு அரசியலில் அனுபவம் இல்லை. பிறகு எப்படி ஆட்சி, அதிகாரத்தை செய்ய முடியும்? அவர்களுக்கு ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் அல்லவா?

அனுபவம் என்று சொல்பவர்கள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததைத் தவிர வேறு என்ன அனுபவம் இருக்கிறது?

அடுத்தவர் ஆரம்பித்த கட்சியில் அமர்ந்துகொண்டு அவர்கள் முகவரியில் அரசியல்வாதியாக இருக்கும் அவர்களுக்கு ஒரு சவால். என்னைப் போல பின்புலம் இல்லாமல் ஒரு தனிக் கட்சி தொடங்கி, குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகள் வாங்க முடியுமா? தைரியம் இருக்கிறதா?

35 ஆண்டுகளாக கட்சி நடத்திக்கொண்டு, ஆட்சி அதிகாரத்திலும் இருந்துகொண்டு இன்னும் கூட்டணிக் கட்சியை நம்பி அரசியல் நடத்தும் இந்த 75 ஆண்டுகள், 50 ஆண்டுகள் வரலாறு கொண்ட கட்சிகளை எதிர்த்து நான் தனியாக அரசியல்கட்சித் தொடங்கியிருக்கிறேன்.

உங்களைப் போன்றவர்களைத் தாண்டி இன்று முதன்மை சக்தியாக மாறி 30 சதவீதத்தை தாண்டி மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறோம். உங்கள் அனுபவம் என்னவென்று சொல்லவா? கட்சியைத் தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்ததுதான் உங்கள் அனுபவம்.

கொள்ளையடிப்பதில்தான் உங்களுக்கு அதிக அனுபவம் உள்ளது. அப்படிப்பார்த்தால் எங்களுக்கு அனுபவம் இல்லைதான். சுட்டுப்போட்டாலும் எனக்கு கொள்ளையடிக்க அனுபவம் வராது என்று விஜய் பேசினார்.

மக்களின் கனவு என்ன?

5 ஆண்டுகள் ஆட்சி நடத்திவிட்டு இன்று உங்கள் கனவுகளைச் சொல்லுங்கள் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் சாருக்கு மக்கள் சார்பாக ஒரு கேள்வி. மக்களின் கனவு என்ன என்று தெரியுமா?

அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியுமா? கடந்த கால தேர்தல்களில் உங்களுக்கு வாக்களித்ததற்கு காரணம், மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கை. ஆனால், நீங்கள் செய்ததோ மக்கள் விரோத ஆட்சி. எனவே, தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க வேண்டும் என்பதே மக்களின் கனவு என்று பேசினார்.

முன்னதாக, சேலம் தவெக கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் ஓமலூர் விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை வழியாக தவெக தலைவர் விஜய் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தார். அவரும் வரும் வழி முழுக்க, ஏராளமான தொண்டர்கள் சாலையில் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். இதனால் பல இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments