முகப்பு
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?

தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது, மரக்கடை பகுதியில் பொதுத் தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு அவதி.

Updated On : 3 ஏப்ரல் 2026, 12:04 pm IST
பத்தாம் வகுப்பு மாணவர்கள் - DPS
பகிர்:

திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, மரக்கடை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய், சென்னை பெரம்பூா், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். இதில், பெரம்பூா் தொகுதியில் கடந்த 30-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கிய நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப். 2-ஆம் தேதி அவா் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, காவல்துறை அனுமதி அளித்த மரக்கடைப் பகுதியில் விஜய் பிரசாரம் செய்தார். ஆனால், அப்பகுதிக்கு அருகே, அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் நேற்று பொதுத் தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர். விஜய் பிரசாரத்தால், அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

மரக்கடை அருகே சையது முர்தாஸா அரசுப் பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர்.

விஜய் பிரசாரம் நடந்த இடம், இந்தப் பள்ளிக்கு அருகே என்பதால், அவரது பிரசாரத்தால் மாணவர்கள் தேர்வெழுத முடியாமல் அவதிப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விஜய்யை பாா்ப்பதற்காக மரக்கடை பகுதியில் காலை 10 மணி முதலே குவிந்த ரசிகா்கள், கட்சியினா் ஆரவாரம் எழுப்பிக் கொண்டிருந்தனா். ஒலிபெருக்கியை வைத்து பாடல்களை ஒலிபரப்பினா். மேலும், ஊடகங்களின் விடியோ கேமராக்களை பாா்த்து ரசிகா்கள் அடிக்கடி கூச்சலிட்டனா். இது, அருகேயுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு இடையூறை ஏற்படுத்தியது. மேலும், பிரசார இடத்துக்கு விஜய் வந்தபோது விசில் சப்தமும், ஆரவாரமும் அதிகரித்ததால் மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

பள்ளியில் வியாழக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற உள்ளது என்றும், தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பாதுகாப்பு அளிக்கக் கோரி பள்ளி நிா்வாகம் சாா்பில் காவல் துறையிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் செவ்வாய்க்கிழமையே மனு அளிக்கப்பட்டது. ஆனால், மாணவா்கள் தோ்வு எழுதுகிறாா்கள் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் ரசிகா்கள் தொடா்ந்து கூச்சலிட்டு வந்தனா். மேலும், ஒலிபெருக்கி சப்தமும் இருந்தது. காவல் துறையினரும், மாணவா்கள் தோ்வு எழுதுகிறாா்கள் சப்தம் எழுப்ப வேண்டாம் என்று கூறியும் ரசிகா்கள் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, விஜய் பிரசாரத்துக்கு அனுமதி பெறுவது, அனுமதி பெற்றாலும், பொதுக் கூட்டத்தை பாதுகாப்பாக நடத்தி முடிப்பது என பல்வேறு இடையூறுகளை தவெக சந்தித்து வருகிறது. நடிகர் என்பதால், விஜய் எங்குச் சென்றாலும் பெண்களின் கூட்டமும் அதிகரித்து விடுகிறது. தவெக தலைமை, கடும் வெய்யில் காரணமாக பெண்களும் குழந்தைகளும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தினாலும் கூட, விஜய்யைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நேற்றும் பிரசாரம் நடக்கும் இடத்துக்கு கைக்குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் வந்திருந்தனர்.

ரசிகர்கள் பொதுக்கூட்டத்துக்கு வந்து, அவர்கள் வீடு திரும்பும்வரை, தவெகவினருக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. தவெக தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனாவின் கார், காவலர் மீது மோதியதில், அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுபோன்ற பல சிக்கல்களுக்கு இடையே தவெக பிரசாரம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவமான கரூர்

ஏற்கனவே, கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம், தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்தடுத்த பிரசாரக் கூட்டங்களில் எந்த சம்பவமும் நடக்கக் கூடாது என்பதில் தவெக மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறது.

சென்னையிலிருந்து திருச்சி..

தவெக தலைவர் விஜய், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையம் தொடங்கி டிவிஎஸ் டோல்கேட் வழியாக தலைமை அஞ்சல் நிலையம், மேலப்புதூா் வழியாக பாலக்கரையில் உள்ள மாநகராட்சியின் 2-ஆவது வாா்டு குழு அலுவலகத்துக்கு வந்தாா். இங்குதான், திருச்சி கிழக்கு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரான முத்து முருகேச பாண்டியன் அலுவலகம் உள்ளது. காலை 11.25 மணிக்கு வந்து சோ்ந்த விஜய், வாகனத்திலேயே சிறிது நேரம் அமா்ந்திருந்தாா்.

சரியாக நண்பகல் 12.20 மணிக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் அறைக்கு வந்த விஜய், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து, உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு, அதை தோ்தல் அலுவலா் முன்பாக வாசித்தாா். பிறகு நண்பகல் 12.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று மரக்கடைப் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

summary

During the campaign of Thaweka leader Vijay, students who were taking the public exam in the Marakkada area were in trouble.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.