காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காஸா இனப் படுகொலையைக் கண்டித்து 'சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும்' என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று(அக். 8) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
காஸாவில் நிகழும் இனப்படுகொலை உலக மக்களின் மனதை உலுக்குகிறது. மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரும் இந்த போரைக் கண்டிக்கின்றனர்.
காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 11,000 பெண்கள், 17,000 குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்
ஓராண்டில் காஸாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. உணவுக்காகக் காத்திருந்தவர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
காஸா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மனித உயிர்கள் விலைமதிக்க முடியாதவை. மனித உரிமை எல்லாருக்கும் பொதுவானது.
இந்த சூழ்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு தமிழகம் முழு ஆதரவு அளிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து இந்திய அரசு, காஸா போரை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
காஸா மக்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து வருகிற அக். 14 ஆம் தேதி கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும்.
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தியும் அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தியும் வரும் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.