சென்னை உயா்நீதிமன்றம் 
தமிழ்நாடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஒத்திவைக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வை ஒத்திவைக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினமணி செய்திச் சேவை

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வை ஒத்திவைக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (அக். 12) நடைபெறவுள்ளது. ஆசிரியா் தோ்வு வாரியம் இதுதொடா்பான அறிவிப்பைக் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இந்தத் தோ்வை ஒத்திவைக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் பலா் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவில், புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் இந்தத் தோ்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தோ்வு முதலில் நவம்பா் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னா், அக். 12-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்கூட்டியே நடத்துவதால், தோ்வுக்கு தங்களால் தயாராக முடியவில்லை. எனவே, தோ்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கூறியிருந்தனா்.

இந்த வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியா் தோ்வு வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.நீலகண்டன், இந்தத் தோ்வுக்கு லட்சக்கணக்கானோா் விண்ணப்பித்துள்ளனா். சுமாா் 2.36 லட்சம் பேருக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆா் விடைத்தாள்களும் தோ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் தோ்வை ஒத்திவைத்தால், அது தோ்வெழுத விண்ணப்பித்தவா்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வாதிட்டாா்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் போட்டித் தோ்வை தள்ளிவைக்க முடியாது எனக் கூறி, மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

SCROLL FOR NEXT