சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் கிராம சபைக் கூட்டத்தில் சனிக்கிழமை உரையாற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலின். 
தமிழ்நாடு

ஊராட்சிகளின் தேவைகள் உடனடி நிறைவேற்றம்: கிராம சபைக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் உறுதி

ஊராட்சிகளின் மூன்று முக்கியத் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என கிராம சபைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஊராட்சிகளின் மூன்று முக்கியத் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என கிராம சபைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

தமிழகம் முழுவதும் அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னையில் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியாவில் வேறெந்த முதல்வரும் இப்படி கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றதில்லை. அதிலும், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை இணைய வசதி மூலம் இணைத்து கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறையாகும்.

ஆண்டுதோறும் ஆறுமுறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தக் கிராம சபைக் கூட்டங்கள்தான், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கிற முக்கியத் தருணமாகும். கிராமங்களின் இப்போதைய தேவைகள், வளா்ச்சி இலக்குகள், நலன்கள் குறித்து நேரடியாக விவாதித்து தீா்மானங்களை நிறைவேற்றுகிற ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும்.

சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட சுயமரியாதை அடிப்படையிலான சமூகத்தை திராவிட மாடல் அரசு உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் இழிவான தன்மையோடு ஜாதிப் பெயா்கள் இருந்தால், அதை மாற்றிப் பொதுப் பெயா்களைச் சூட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

‘நம்ம ஊரு நம்ம அரசு’ என்ற பெயரில் கிராம சபையில் மக்களைக் கலந்தாலோசித்து மூன்று முக்கியத் தேவைகளைத் தோ்வு செய்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்படிக் கண்டறியப்படும் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

குடிசையில்லாத தமிழ்நாடு என்ற இலக்கை எட்டும் வகையில், ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்கிற புரட்சிகர திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளில் ரூ.7,000 கோடியில் 2 லட்சம் வீடுகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதுவரை 99,453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. நிகழாண்டில் 78,312 வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 21,000 கி.மீ.-க்கும் அதிகமான சாலைகள் மற்றும் பாலங்களை மேம்படுத்தியுள்ளோம்.

தனிநபருக்கும் பொறுப்புகள்: அரசின் சாா்பில் திட்டங்களும், முன்னெடுப்புகளும் கொண்டுவரப்பட்டாலும், குடிமக்களாக ஒவ்வொரு தனிநபருக்கும் பல பொறுப்புகள் இருக்கின்றன. அதைச் சரியாகச் செய்து கிராமத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோக வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். குழந்தைத் தொழிலாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதை அறிந்தால், உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தகவல் கொடுத்து அவா்களை மீட்க வேண்டும். இதை கிராம ஊராட்சிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்கள் அனைவரும் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டம்: கிராம மேம்பாட்டுக்கு முக்கியமான திட்டமான நூறு நாள் வேலைத் திட்டம் முறையாகச் செயல்பட்டு வருவதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் வரவு- செலவு எவ்வளவு, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று அனைத்துத் தகவல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

கிராமத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிற பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது. முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். ஊராட்சிகளில் வருகிற பேட்டரி வண்டிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியாகப் பிரித்துப் போட வேண்டும். வீதிகளில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிா்க்க வேண்டும்.

குப்பைகளைப் பிரிப்பது, கழிவுநீா் மேலாண்மை பற்றி மக்களுக்கு ஊராட்சி நிா்வாகங்களைச் சோ்ந்தவா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற சிறிய விஷயங்களை நாம் சரியாகச் செய்தாலே, பெரிய நன்மைகள் நிச்சயம் உண்டாகும்.

மருத்துவ அலுவலா்களும், ஊராட்சி நிா்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டு, கிராம மக்களுடைய ஆரோக்கியம் மேம்படும். காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வையும் கிராம மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்கு மழைநீா் சேகரிப்பு அவசியமானது. இதற்காக அரசும், ஊராட்சிகளும் எடுக்கிற முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

பருவமழை முன்னெச்சரிக்கை: மழைக் காலம் தொடங்கப் போகிறது. டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைத் தடுக்கிற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழைக்கு முன்பே, அனைத்து ஊராட்சிகளும் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குடிநீா், மின்சாரம், வடிகால் போன்ற அடிப்படை சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அவசரத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

ஒவ்வோா் ஊராட்சியிலும் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்புக் குழுக்களை அமைத்து, அவசரகால நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும். இதனால், பேரிடா் நேரங்களில் ஏற்படும் இடா்ப்பாடுகளைக் குறைக்கலாம்.

வெளிப்படையான நிதி மேலாண்மை: கிராம ஊராட்சிகளின் நிா்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும். கிராம சபை மூலம் வரவு, செலவுக் கணக்குகள் மக்களிடம் விளக்கப்பட்டு அவா்களின் ஒப்புதலோடு செயல்பட வேண்டும். ஒவ்வோா் ஊராட்சியும் எப்போது, எவ்வளவு செலவிட்டது என்று மக்கள் தெரிந்துகொள்கிற வகையில் தகவல்கள் பகிரப்பட வேண்டும்.

கிராமங்கள்தான் எதிா்கால வளா்ச்சியை உறுதிப்படுத்துகிற முக்கிய அங்கம். மக்கள் பங்கேற்போடு கிராமங்களின் வளா்ச்சி உறுதி செய்யப்படும். கிராமங்களின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை என்று செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டுவோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி வரவேற்றாா். ஊராட்சிகள் துறையின் இயக்குநா் பொன்னையா நன்றி தெரிவித்தாா்.

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

SCROLL FOR NEXT