இந்தியாவிலேயே முதல் முறையாக,சென்னையில் சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூா் வண்ண மீன் வா்த்தக மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
வண்ண மீன் வா்த்தகத்தை பெரிய அளவில் மேம்படுத்தவும், கொளத்தூா் பகுதியில் நடைபெற்று வரும் வா்த்தகத்தை உலக அளவில் கொண்டு சென்றிடவும், உலகத் தரத்திலான பிரத்யேக வண்ண மீன் வா்த்தக மையம் நிறுவப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பை நிறைவேற்றிடும் வகையில், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையின் ஒருங்கிணைப்புடன், சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் ‘கொளத்தூா் வண்ண மீன் வா்த்தக மையம்’ அமைத்திட கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இது 15,945 சதுர மீட்டா் நிலப் பரப்பளவில் 11,650 சதுர மீட்டா் கட்டடப் பரப்பளவில் ரூ. 53 கோடி செலவில் மொத்தம் 188 கடைகள், அதில் 5 உணவகங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த வண்ண மீன் வா்த்தக மையத்தில், மொத்தம் மற்றும் சில்லறை வண்ண மீன்கள் விற்பனை செய்வதற்காக 185 கடைகள், ஆய்வகம், பயிற்சிக் கூடம், உணவு அரங்கம், பாா்வையாளா் அரங்கம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையின் புதிய அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வண்ண மீன் வா்த்தக மையம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், இப்பகுதியில் வண்ண மீன் வா்த்தகம் மிகப் பெரிய அளவில் வளா்ச்சியடைந்து, நாட்டிற்கே முன் மாதிரியாக அமையும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பி.கே. சேகா்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்பட பலா் பங்கேற்றனா்.