துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும் எனவும், கலை என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அது சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்

இணையதளச் செய்திப் பிரிவு

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும் எனவும், கலை என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அது சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது, முதலில், இங்கே விருது பெறுகின்ற அத்தனை கலைஞர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், கைத்தட்டல்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் எப்போதுமே கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடுகின்ற ஒரு இயக்கம். தமிழ்நாட்டு மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த கலையையும், ஒரு கருவியாக பயன்படுத்தியவர்கள் தான், நம்முடைய திராவிட இயக்க தமிழ்நாட்டு தலைவர்கள். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் நாடகத் துறையிலும், திரைத் துறையிலும் முத்திரை பதித்தவர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திரைப்படங்கள், நாடகங்களில் நடித்திருக்கிறார்கள். இன்றைக்கும், இசையையும், நாடகங்களையும், திரைப்படங்களையும் ரசிக்கக் கூடியவர் தான் நம்முடைய முதல்வர். எனவே தான், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் நடத்துகின்ற அத்தனை நிகழ்ச்சிகளையும், அதனுடைய செயல்பாடுகளையும் தொடர்ந்து அவர் ஊக்கப்படுத்தி வருகின்றார்.

இந்த தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், கலைமாமணி விருதுக்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கும் இந்த அரங்கத்திற்கும் மிக, மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சங்கீத நாடக சங்கம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் என்று மாற்றியமைத்தவர் கலைஞர்.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியதும் கலைஞர். அதே போல் ஆரம்பத்தில், 'கலா சிகாமணி', என்ற பெயரில் தான் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அதை கலைஞர் பெயர் மாற்றம் செய்து “கலைமாமணி விருது” என்று அறிவித்தார்.

1967-இல் கலைஞர் கலைமாமணி விருதிற்கு சிறந்த வசனகர்த்தாவாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் அமைச்சர், முதல்வராக இருந்தவர் பேரறிஞர் அண்ணா. கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இந்த அரங்கத்தில் கலைஞர் பெயரைச் சொன்னதும், அவர் எழுந்து, விருது வாங்குவதற்காக மேடைநோக்கி வந்தார்.

அப்போது முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா, அந்த விருதை கலைஞரிடம் கொடுக்காமல், விருதுக்கான பதக்கத்தை தன்னுடைய கழுத்திலே போட்டுக் கொண்டார். பிறகு தான், அந்த பதக்கத்தை கலைஞரின் கழுத்தில் அணிவித்தார். கலைமாமணி விருது பெறுவதால், கலைஞருக்கு கிடைத்த பெருமையை தனக்கு கிடைத்த பெருமையாக கொண்டாடினார் பேரறிஞர் அண்ணா.

எழுத்தாளர், நாடக ஆசிரியர், வசன கர்த்தா, பாடலாசிரியர், அரசியல் தலைவர், முதல்வர் என்று கலைஞர் எத்தனையே பரிணாமங்கள் இருந்தாலும், கடைசிவரைக்கும் அவருடைய அடையாளமாக 'கலைஞர்' என்கிற பெயர்தான் இன்று வரைக்கும் நிலைத்து நீடித்து இருக்கிறது.

இங்கே விருதுகளை பெறவிருக்கின்ற கலைஞர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள நான் விரும்புகின்றேன். கலைமாமணி விருதை வாங்குவதால் உங்களுக்கு பெருமை என்று சொல்வதை விட, உங்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை கொண்டிருப்பதால் நம்முடைய தமிழ்நாட்டுக்கு அது பெருமை என்பதை நான் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

2009 இல் இதே கலைவாணர் அரங்கத்திலே நடந்த நிகழ்ச்சியில், கலைமாமணி விருதுகளை வழங்கிவிட்டு கலைஞர் பேசும்போது, நீங்கள் தேசிய விருதுகளை வாங்கலாம், சர்வதேச விருது பெறலாம். ஆனால், எந்த விருதாக இருந்தாலும் அது ஒரு தாயின் முத்தத்திற்கு ஈடாகாது.

இந்த கலைமாமணி விருது அந்த தாயின் முத்தத்திற்கு ஈடானது என்று கலைஞர் சொல்லியிருக்கின்றார். தாயின் முத்தத்திற்கு நிகரான அந்த கலைமாமணி விருதை தான் இன்றைக்கு முதல்வர் உங்களுக்கு தர இருக்கின்றார்கள்.

நம்முடைய அரசு அமைந்த பிறகு, நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித் தொகையை, ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி கொடுத்தவர் முதல்வர். அதுமட்டுமல்ல, இந்த மன்றத்திற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்டு வந்த நிதி ரூ.3 கோடியாக இருந்தது, நம்முடைய அரசு அமைந்த பிறகு அது ரூ. 4 கோடிக உயர்த்தி கொடுத்தார்.

அதேபோல், ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகின்றது. அந்த விழாக்களில், அனைத்து கலைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கின்ற வகையிலும், நம்முடைய கலைகளை மீட்டெடுக்கின்ற வகையிலும், இசைச் சங்கமம், கலைச் சங்கமம் என கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து கலைவிழாக்கள் நடத்தப்படுகின்றது.

சமீபத்தில், தமிழில் சிறப்பான கலை நூல்களை வெளியிடுகின்ற 5 நூலாசிரியர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. எழுத்தாளர்களுக்கு வீடுகள், மறைந்த சிறந்த எழுத்தாளர்களுக்கு மணி மண்டபம் போன்றவற்றை நம்முடைய அரசு தொடர்ந்து உருவாக்கி வருகின்றது.

இங்கே வந்திருக்கக் கூடிய கலைஞர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னுடைய ஒரு வேண்டுகோளை வைக்க நான் விரும்புகின்றேன். உங்களுடைய கலைகளை நீங்கள் உங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

சமூக வலைதளங்களான யுடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற தளங்களில் உங்களுடைய கலைகளை நீங்கள் உலகறியச் செய்ய வேண்டும். கலை என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அது சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வாகை சந்திரசேகர், விஜயா தாயன்பன், இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த இந்த மன்றத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இயல், இசை, நாடக மன்றம் என்றைக்கும் கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கும் என்று கூறினார்.

Dy.CM Speech at Kalaimaamani Award Function

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT