கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக தாங்களுக்கே தெரியாமல் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக பலியானவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு விரிவாக விசாரணை நடத்தி தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசு, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஆகியோரின் தரப்பு வாதங்களை கேட்டுப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கும் நிலையில், தங்களுக்கே தெரியாமல் ஏமாற்றி கையொப்பம் பெற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர், மனைவி சர்மிளா மற்றும் மகனைவிட்டு பிரிந்து சென்றவர். அவர் பணத்துக்காக வழக்கு தொடர்ந்திருப்பதாக சிறுவனின் தாயார் சர்மிளா உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், மனைவியை இழந்து வாழும், செல்வராஜ் என்பவரிடம் அதிமுகவினர் ஏமாற்றி கையெழுத்து வாங்கி, வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாக தமிழக அரசு தரப்பில் நீதிபதிகளிடம் முறையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு திருப்பமாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.