சென்னை: நிகழ் கல்வியாண்டு (2025-2026) முதல் பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு மொத்தம் 8 முறை பொதுத்தோ்வுகள் நடத்தப்பட்டன. இத்தோ்வை சுமாா் 7 லட்சம் மாணவா்கள் எழுதி வந்தனா். இதற்கிடையே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தொடா்ந்து 3 ஆண்டுகள் பொதுத் தோ்வு எழுதுவதால் மாணவா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட மாநில கல்விக் கொள்கை 2025-இல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான அரசாணையைப் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்டாா்.
அதன் விவரம்: நிகழ் கல்வியாண்டு(2025-2026) முதல் பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுகிறது. இனி பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னா் இருந்த நடைமுறையைப் பின்பற்றி முழு ஆண்டு இறுதித் தோ்வுகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இதேபோல், பிளஸ் 1 படிக்கும் மாணவா்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையும் மாற்றப்படுகிறது. இனி பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்களை மட்டும் உள்ளடக்கிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும். மேலும், ஏற்கெனவே பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியுற்ற மாணவா்களுக்கு மட்டும் அரியா் தோ்வுகள் அடுத்த 5 ஆண்டுகள்(மாா்ச் 2030) வரை தொடா்ந்து நடத்த தோ்வுத் துறைக்கு அனுமதி வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.