புது தில்லி: கரூரில், காவல்துறை கூறிய இடத்தில்தான் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார், வேறு எங்கும் இல்லாத வகையில், கரூர் எல்லைக்கு வந்த எங்களை, காவல்துறையினர் வரவேற்றனர். கூட்ட நெரிசல் இருக்கும் ஓரிடத்துக்கு காவல்துறை வரவேற்றது ஏன்? என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியிருக்கிறார்.
தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய தவெக மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் பிரசாரம் செய்ய எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. கரூரில் காவல்துறை சொன்ன இடத்தில்தான் விஜய் பிரசாரம் செய்தார்.
கரூரில், விஜய் தாமதமாக பிரசாரத்துக்கு வந்தார் என்ற குற்றச்சாட்டு, அபாண்டமான குற்றச்சாட்டு. கரூரில், விஜய் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்திருந்தது பிற்பகல் 3 மணி முதல் 10 மணிக்குள். அதற்குள்தான் விஜய் கரூர் வந்துள்ளார். எனவே தாமதமாக வந்தார் என்பது பொய்க் குற்றச்சாட்டு.
கரூர் எல்லைக்கு வந்த போது, கரூர் காவல்துறையினர்தான் எங்களை வரவேற்றனர். மாவட்ட எல்லையில் நுழைந்ததும் வழக்குத்துக்கு மாறாக, கரூர் காவல்துறை எங்களை வரவேற்றது. தவறு இருப்பது தெரிந்தால் கரூர் காவல்துறை ஏன் எங்களை வரவேற்றது. வேறு எங்கும் வரவேற்காத நிலையில், கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.
ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் தடியடி நடத்தினர். கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது, காவல்துறை அதிகாரிகள்தான் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர். அப்போதும் நாங்கள் கரூர் எல்லையில் நின்றிருந்தோம். ஆனால், நீங்கள் உள்ளே வந்தால் கலவரம் ஆகிவிடும் என காவல்துறை கூறியதால்தான் அங்கிருந்து வெளியேறினோம். எல்லோரும் சொல்வது போல நாங்கள் தப்பித்து ஓடவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக-வை வழக்கில் இணைக்காமல் இருந்தும் பல்வேறு கருத்துகளை, நீதிபதி பிறப்பித்திருந்தார் என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, தவெக கட்சியை முடக்க வேண்டும் என திமுக முயற்சித்துள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிக்க.. கரூர் பலி: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.