மாநில திட்டக் குழு ஆய்வறிக்கைகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய மாநில திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன். உடன் அலுவல் சார் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைச் செயலர் சஜ்ஜன் சிங் ரா சவான், மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலர் எஸ்.சுதா.  
தமிழ்நாடு

உரிமைத் தொகை திட்டம்: குடும்ப வரவு - செலவில் முக்கியப் பங்காற்றும் பெண்கள்; மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால், குடும்பங்களில் பொருளாதார முடிவுகளை எடுப்பதில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாகத் திட்டக் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால், குடும்பங்களில் பொருளாதார முடிவுகளை எடுப்பதில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாகத் திட்டக் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை மாநில திட்டக் குழு சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலினிடம் செவ்வாய்க்கிழமை வழங்கியது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தாக்க மதிப்பீடு, நான் முதல்வன் திட்டத்தின் மதிப்பீட்டாய்வு, தமிழ்நாட்டில் புத்தொழில் தொடக்கத்துக்கான சுற்றுச்சூழல் அமைப்பு - வாய்ப்புகள் மற்றும் சவால்கள், தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகரிய மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றை மையப்படுத்தி மாநில திட்டக் குழு அறிக்கையைத் தயார் செய்தது.

இந்த ஆய்வறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மாநிலத் திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.

ஆய்வறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரைச் சென்றடைந்துள்ளது. இந்தத் திட்டம் மூலமாக வழங்கப்படும் தொகையை பயனாளிகள் பெரும்பாலும் மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்துகின்றனர். அதில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி தரமான உணவுப் பொருள்களை வாங்கும் நுகர்வு செலவுக்காகப் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், திட்டம் மூலம் பெறும் தொகையை பெண்கள், தாமாகவே முடிவெடுத்து தங்களது குடும்பச் செலவுகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். பயனாளிகளில் கணிசமானோர், அவர்தம் குடும்பங்களின் பொருளாதார முடிவுகளில் தங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நான் முதல்வன் திட்டம்: "நான் முதல்வன்' திட்டமானது, மாணவர்களின் தொழில் சார்ந்த திறன்களை வளர்க்க முக்கியப் பங்காற்றுகிறது. கல்லூரி முடிந்து தொடக்க நிலையில் பணியில் சேரும் மாணவர்களின் தொழில் கற்றல் திறன், நான் முதல்வன் திட்டத்தால் மேம்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து சிரமங்களை களையும் வகையில், உள்ளூர் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்துவது அவசியமாகும். இதற்கான தேவையை ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

புத்தொழில் திட்டம்: புத்தொழில்கள் தொடக்கத்துக்கான சுற்றுச்சூழல் அமைப்பு, "ஸ்டார்ட்அப்' எனும் இயக்கம் மூலம் வேகமாக வளர்ந்துள்ளது. அதன் திறனை முழுமையாகச் செயல்படுத்த நமது மாநிலம் அதற்கென போதிய விழிப்புணர்வு மற்றும் ஆதரவுத் திட்டங்களுக்கான நடைமுறைகளை மேம்படுத்தி நிதி செயல்முறைகளை எளிதாக்க வேண்டும்.

பாலினம் மற்றும் துறை ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளை நிவர்த்தி செய்து நீடித்த நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகரிய மேம்பாட்டுக் கொள்கை மற்றும் வீட்டு வசதிக் கொள்கை நகர்ப்புற இணைப்புகளை வலுப்படுத்தவும், விளிம்பு நிலை சமூகங்களுக்கென தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கான முயற்சிகளுக்கும் வழிகாட்டுகிறது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் சஜ்ஜன்சிங் ரா சவான், மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலர் எஸ்.சுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எழுத்து அணிந்த கவிதை... மோனாமி கோஷ்!

பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்களுடன் ஜேடியு முதல் பட்டியல் வெளியீடு!

மத்திய அரசுப் பள்ளியில் 7,267 காலியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை!

சக்தித் திருமகன் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT