மாம்பழ விவசாயிகளின் நலன்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:
மாம்பழப் பருவத்தில் மா விவசாயிகள் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசின் தலையீடு கோரி, கடந்த ஜூன் மாதம் கடிதம் எழுதியிருந்தேன். அதில், இந்தியாவில் விற்கப்படும் மாம்பழ பானத்தில் உள்ள பழக்கூழின் அளவு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமல், பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழச் சாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனவும், பானங்களில் மாம்பழக் கூழ் சேர்க்கப்படுவதில் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைப் பிறப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தேன்.
இந்தக் கடிதத்துக்கு இன்னும் நேர்முறையான பதில் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. எனவே, மா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், நம் நாட்டில் இந்தப் பானத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டும், மாம்பழங்களை அடிப்படையாகக் கொண்ட பான உற்பத்தித் தொழிலில் குறைந்தபட்சம் 18 முதல் 20 சதவீதம் வரை பழக்கூழ் உள்ளடக்கத்தை உறுதி செய்ய அறிவுறுத்த வேண்டும். அதனால் அந்தப் பானத்தின் தரமும் மேம்படும்.
தமிழ்நாட்டின் மாம்பழ ஏற்றுமதிக் கொள்கையானது, மாம்பழ வகை ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், மாம்பழப் பொருள்களை பல்வகைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. அதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், ஏற்றுமதி தரநிலைகளுக்கு ஏற்ப செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் சாத்தியப்படும்.
அத்தகைய நடவடிக்கைகள் மாம்பழங்களுக்கு அதிக மதிப்பைச் சேர்ப்பதுடன், மாம்பழக் கூழ் தொழில்களை அதிகமாகச் சார்ந்திருப்பதையும் குறைக்கும்.
எனவே, இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இந்தப் பிரச்னையில் தாங்கள் தலையிட்டு மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டல் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.