தமிழகத்தில் சம்பா பருவத்துக்குத் தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.16-ஆம் தேதி தொடங்கும் எனவும், இயல்பைவிட கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கூடுதலாக 12,000 மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளது. இதைப் பெற்று தேவைப்படும் விவசாயிகளுக்கு முறையாக விநியோகம் செய்ய வேளாண் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பா பருவத்துக்கான உரங்கள் தடையின்றி இருப்பு வைத்து விநியோகம் செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் நடப்பு சம்பா பருவத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களுக்குத் தேவையான அதிக உரம் இருப்பு வைக்க வேண்டும்.
சில்லறை விற்பனை நிலையங்களில் மானிய விலையில் உரங்கள் விற்பனை செய்யும்போது எவ்வித இணை இடுபொருள்களைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது.
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் ஆகிய நிறுவனங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் சம்பா பருவ தேவைக்கேற்ப உரங்களை இருப்பு உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், இருப்புகளை ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். உரப் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 14,383 உர விற்பனை நிலையங்கள், உரக்கிடங்குகளில் வேளாண் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், 1,409 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
இந்தக் கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் வ.தட்சிணாமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் த.ஆபிரகாம், வேளாண் துறை இயக்குநர் பா.முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.