பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் 
தமிழ்நாடு

கரூர் பலி: விஜய் தாமதமே காரணம் - பேரவையில் முதல்வர் பேச்சு!

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் தாமதத்தால்தான் நெரிசல் ஏற்பட்டதாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து வருகிறார்.

பேரவையில் அவர் பேசுகையில்,

``கரூர் மாவட்டத்தில் நடந்த துயரச் சம்பவம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. நம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியது. இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியையும், உறவுகளை இழந்தவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூர், வேலுச்சாமிபுரத்தில் செப். 27 ஆம் தேதியில் தவெக அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி அளிக்கப்படவில்லை.

செப். 25-ல் லைட்ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை பகுதியில் அனுமதி கோரியபோதும், பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு நடத்த கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மனு அளித்தார். அவரின் மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

கரூர் நிகழ்ச்சிக்கு தமிழக காவல்துறையின் சார்பாக, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 517 காவல் அதிகாரிகள் கரூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதுமட்டுமின்றி, வெளிமாவட்டங்களிலிருந்து ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதிவிரைவுப் படை காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டனர். அன்றைய நாளில் பாதுகாப்புப் பணிக்காக அதிகாரிகள், காவல்துறையினர் என மொத்தம் 606 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

வழக்கமாக, அரசியல் கூட்டங்களுக்கு அளிக்கப்படும் காவல்துறை பாதுகாப்பைவிட அதிகளவில்தான் வழங்கப்பட்டிருந்தது. 10,000 பேர் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கும் அதிகமானோர்தான் வருவர் என்று கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நடத்த அனுமதி கோரிய அனுமதிக் கடிதத்தில், மாலை 3 மணிமுதல் இரவு 10 மணி என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், செய்தியாளர் சந்திப்பு, சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு அக்கட்சித் தலைவர் வருவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

இதனால், கரூரில் காலை முதலே மக்கள் வரத் தொடங்கி விட்டனர். நாமக்கல்லில் இருந்து இரவு 7 மணிக்கு அக்கட்சித் தலைவர் வந்தார். அதாவது, அறிவிக்கப்பட்ட 12 மணி கடந்து 7 மணிநேரம் கழித்துதான் வந்தார். இந்தக் காலதாமதம், கூட்ட நெரிசலுக்குக் காரணமாக அமைந்தது.

சில முக்கிய ஏற்பாடுகளை கூட்ட ஏற்பாட்டாளர்கள் செய்ய வேண்டும். கரூரில் அவை செய்யப்படவில்லை. காலைமுதல் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை, உணவு வழங்க எந்தவித ஏற்பாடுகளும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதையைக் கழிக்க, பெண்களால் வெளியில் செல்ல இயலவில்லை.

அதே வேலுச்சாமிபுரத்தில், சம்பவத்துக்கு 2 நாள்கள் முன்னதாக (செப். 25) எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்ட பரப்புரைக் கூட்டத்தில் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர்; எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தது. அதில் சுமார் 12,000 முதல் 15,000 பேர் பங்கேற்றனர். அந்தப் பரப்புரைக்கு சுமார் 137 காவலர்கள், 30 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், அதற்கு நேர்மாறாக இந்தக் கட்சியின் கூட்டம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்ட எல்லை, தவிட்டுப்பாளைய சோதனைச் சாவடி நிகழ்ச்சிக்குப் பின், கேரவன் வாகனத்தைப் பின்தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும் கட்சியினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பிரசார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும், அக்‌ஷயா மருத்துவமனை அருகே வாகனத்தை நிறுத்தி உரையாற்றுமாறு பிரசார வாகனத்தில் இருந்தவர்களை கரூர் மாவட்ட உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், முன்பே அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசுவோம் என்று பிடிவாதத்துடன், தொடர்ந்து முன்னேறிச் சென்றுள்ளனர்.

காவல்துறையினரின் வழிமுறைகளை மீறி, அக்‌ஷயா மருத்துவமனையிலிருந்து 30 முதல் 35 மீட்டர் தொலைவில் வாகனம் சென்றபோது, இருபுறமும் இருந்த கூட்டத்தை நிலைகுலையச் செய்தது.

இதனால், கூட்டத்தில் இருந்த பெண்கள், குழந்தைகளிடையே பீதி, மூச்சுத் திணறல், மயக்கம், நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டிருக்கின்றனர்’’ என்று தெரிவிக்கிறார்.

மேலும், பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பான விவாதத்தில் விஜய்யின் பெயரை திமுகவினர் குறிப்பிடவில்லை. கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் என்று மட்டுமே குறிப்பிட்டனர்.

இதையும் படிக்க: கரூர் பலி: அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம்! பேரவையில் இபிஎஸ்

CM Stalin speech in TN Assembly about Karur Stampede

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் வருவாய் 5% அதிகரிப்பு!

ரத்தக் கொதிப்பில்தான் கருப்புப் பட்டை அணிந்தோம்: இபிஎஸ்

கூகுளுடன் கைகோக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏஐ தொழில்நுட்பத்தில் இசை!

பாக்., - ஆப்கன் எல்லை மோதல்! 48 மணிநேர போர் நிறுத்தம் அமல்!

தம்மம் புரமோஷன்... ரஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT